மேற்கு உ.பி.யில் பாஜகவுக்கு தலைவலியாகும் ஜாட் அரசியல்: அமித் ஷா முயற்சி வெல்லுமா?

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் 2 கட்டத் தேர்தல் நடைபெறும் மேற்கு மாவட்டங்களில் கணிசமாக வசிக்கும் ஜாட் சமூகத்தினர் இந்த முறை பாஜக மீது அதிருப்தியில் உள்ள நிலையில், அவர்களை ஈர்க்க கட்சித் தலைமை பகீரத பிரயத்தனம் செய்கிறது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் தேர்தலுக்கு ஒரு சில நாட்களே இருப்பதால் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதில் முசாபர்நகர், ஷாம்லி, மீரட், காசியாபாத், ஹப்பூர், பாக்பத், புலந்த்ஷாஹர், கவுதம் புத் நகர், அலிகார், மதுரா, ஆக்ரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், பிஜ்னூர், மொராதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, பரேலி, படாயுன் மற்றும் ஷாஜகான்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளன. இந்த இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பெரும்பாலான தொகுதிகளில் ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.

மேற்கு உ.பி.யில் மக்கள் தொகையில் சுமார் 10 முதல் 15 சதவீதம் வரை உள்ளதாக ஜாட் சமூகத்தினர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு உ.பி.யில் 12 மக்களவை தொகுதிகளிலும், சுமார் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஜாட் சமூகத்தின் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது. இதுமட்டுமின்றி அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த ஜாட் சமூகத்தினர் உ.பி. ஹரியாணா, ராஜஸ்தான், டெல்லியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள், 160 சட்டப்பேரவைத் தொகுதிகள் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை கொண்டவர்கள். கரும்பு பயிரிட்டு உ.பி.யின் பணக்கார விவசாய சமூகமாக அவர்கள் திகழ்கின்றனர்.

மேற்கு உ.பி.யை பொறுத்தவரையில் முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் லோக்தள கட்சி அந்த காலம் முதல் இந்த பகுதியில் செல்வாக்குடன் விளங்கி வருகிறது. ஜனதா காலத்தில் சரண்சிங் தொடங்கிய இந்த அரசியல் எழுச்சி மூன்று தலைமுறையாக நீடிக்கிறது. அவரது மகன் அஜித் சிங் ராஷ்ட்ரீய லோக்தள கட்சியை வழிநடத்தி வந்தார். அவரது காலத்திலேயே மேற்கு உ.பி.யில் பாஜக செல்வாக்கு பெறத் தொடங்கி விட்டது.

2013 -ல் முசாபர்நகரில் நடந்த வகுப்பு மோதல், மேற்கு உ.பி. அரசியலில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இது 2014 மக்களவைத் தேர்தலில் இந்தப் பகுதியில் மோடி அலை வீச காரணமாகவும் அமைந்தது.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு உ.பி.யின் 17 மாவட்டங்களில் மொத்தமுள்ள 94 இடங்களில் பாஜக 73 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் ராஷ்ட்ரீய லோக்தள கட்சி கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு இழந்து வருகிறது. அந்தப் பகுதியை தங்களின் கோட்டையாகவே பாஜக கருதி வந்தது.

கடந்தாண்டு கரோனாவால் பாதிக்கப்பட்ட அஜித் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகன் ஜெயந்த் சவுத்திரி கட்சியை வழி நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் புதிய வேளாண் சட்டங்களால் அதிருப்தியில் அடைந்த ஜாட் சமூகம் நடத்திய போராட்டம் டெல்லி புறநகர் பகுதியில் நாட்டையும், மத்திய அரசையும் உலுக்கியது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றாலும் ஜாட் சமூகத்தின் கோபம் முழுமையாக தணியவில்லை. அண்மையில் நடந்த தேர்தல்களில் கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்த சமூகத்தை மீண்டும் ஈர்க்க பாஜக தீவிர முனைப்பில் உள்ளது.

பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் ஜாட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டியுள்ளனர். பிரச்சாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்தநிலையிலும் அமித் ஷா, ஜாட் தலைவர்களின் ஒரு பிரிவினரின் கூட்டத்தை நடத்தினார்.

ஜாட் சமூகத்தின் ஒரு பிரிவு தலைவர்களை சமாதானம் செய்து பாஜக பக்கம் கொண்டு வர அமித் ஷா சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. பாஜக மிகவும் செல்வாக்குடன் திகழும் மதுரா போன்ற ஜாட் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் மக்கள் மனநிலை பாஜகவுக்கு இணக்கமாக இல்லை.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் ஜெயந்த் சவுத்திரி கூட்டணி அமைத்துள்ளார். இந்த தேர்தலில் யாதவர்களுடன், ஜாட் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களை மீண்டும் ஒன்றிணைப்பது இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமானது.

ஏற்கெனவே, உ.பி., ராஜஸ்தான், டெல்லி ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ஜாட் சமூகம் ஓபிசி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அண்டை மாநிலமான ஹரியாணாவில் பாஜக ஆட்சி செய்யும் நிலையில் ஒபிசி பட்டியலில் ஜாட் சமூகத்தை சேர்க்கக்கோரி நடந்த போராட்டம் 2016 ஆம் ஆண்டில் பெரும் வன்முறையில் முடிந்தது.

சவுத்திரி ஜெயந்த்- அகிலேஷ் யாதவ்

இதனால் 2020-இல் அவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. மத்திய பட்டியலில் உள்ள ஓபிசி பிரிவில் ஜாட் சமூகத்தையும் சேர்க்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. அதேபோல் கரும்புக்கான நிலுவைத் தொகையை செலுத்துவது போன்ற பிரச்சினைகளும் உள்ளன.

பாஜக தலைவர்களுக்கு எதிரான கோபம் மேற்கு உ.பி.யில் குறைந்து விட்டாலும் பாஜகவுக்கு ஆதரவான மனநிலை வந்ததாக தெரியவில்லை என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு உ.பி.யில் பாஜகவை தடுத்து நிறுத்துவது என்பது சமாஜ்வாதி கட்சி ஆட்சியை நோக்கி நகர்வதற்கும் அவசியமான தேவை எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே கிழக்கு உ.பி.யில் செல்வாக்குடன் திகழும் பாஜகவுக்கு வெற்றிக் கனியை பறிக்க மேற்கு உ.பி.யின் வெற்றியும் மிகவும் அவசியமாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.