லதா மங்கேஷ்கரின் இனிய பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்; ஹமீத் கர்சாய்

காபூல்,
பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார். 
இந்தியாவின் இன்னிசைக்குயில் என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92.  அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக 2 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், 2 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய தகவல் ஒலிபரப்பு  மந்திரி அனுராக் சிங் தாக்குர், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய மந்திரி நிதின் கட்கரி, இன்று காலை பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு சென்று லதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். லதா மங்கேஷ்கரின் உடல் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி பியூஷ் கோயல், மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி,  முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, கோவா முதல்-மந்திரி பிரமோத், சரத் பவார், சச்சின், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  தொடர்ந்து முப்படை, மராட்டிய காவல்துறை முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அவரின் மறைவுக்கு உலக தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோன்று ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  அதில், தன்னுடைய குரலால் லட்சக்கணக்கான மனங்களை மகிழ்ச்சியால் நிறைத்தவர்.  அவரது இனிய பாடல்கள் உலகம் முழுவதும் பரவியிருப்பதுடன் என்றும் நிலைத்திருக்கும்.  அவரது குடும்பத்தினர் மற்றும் இந்திய மக்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.  இந்தியாவின் இசைப்பறவை ஆத்மா அமைதி அடையட்டும் என தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.