'எங்களால் முடிந்தது; உங்களால் முடியாதா?' – சமாஜ்வாடிக்கு ஆதரவாக களத்தில் குதித்த மம்தா!

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல், வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.

உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில், ஒரே கட்டமாக, வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில், வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில், முதற்கட்ட தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியும், வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள், வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜ்வாடி வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக நேற்று மாலை அவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து லக்னோ புறப்பட்டு சென்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அகிலேஷ் யாதவ்
அழைப்பின் பேரில், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சமாஜ்வாடியை ஆதரித்து பிரசாரம் செய்ய லக்னோவிற்கு செல்வதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்று தலைநகர் லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “பாஜக தனது முழு பலத்தையும் மேற்கு வங்கத்தில் நிலைநிறுத்தியது. ஆனால் அவர்களால் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க முடியவில்லை. மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இருந்து லக்னோவுக்கு வந்துள்ளார். ஆனால் பாஜகவைச் சேர்ந்தவர்கள், ‘மோசமான வானிலை’ எனக் கூறி டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு வரவில்லை. பாஜகவின் பொய் விமானம் இந்த முறை உத்தர பிரதேசத்தில் தரையிறங்க முடியாது” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

சமாஜ்வாடி கட்சியை ஆதரித்து அவர்களை வெற்றி பெறச் செய்து, பாஜகவை தோற்கடிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள். நான் வரும் மார்ச் 3 ஆம் தேதி வாரணாசிக்கும் செல்ல இருக்கிறேன். மேற்கு வங்க மாநில மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டினர். அதே போல் நீங்களும் பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதை தவிர வேற எதுவும் தெரியாது. அவரை வெளியே செல்ல விட்டு விட வேண்டும். நாட்டிற்கே ஆபத்தான கட்சியாக பாஜக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.