கட்டாய தடுப்பூசியை எதிர்த்து நடைபெறும் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்- கனடா பிரதமர் ட்ரூடோ

ஒட்டாவா,
கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

அந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால், அது அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது. இதனால் தலைநகரில் நிலைமை மோசமானதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டார்.
பெருந்திரளானோர் ஒன்று கூடி நடத்தி வரும் இந்த போராட்டத்தால் ஒட்டாவா நகரம் நிலை குலைந்து போய் உள்ளது.இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஒட்டாவா நகர மேயர் ஜிம் வாட்சன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
இந்த நிலையில் மக்களின் இந்த போராட்டம் “நிறுத்தப்பட வேண்டும்” என கூறி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ தனது டுவிட்டர் பக்கத்தில், “கனடா நாட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், தங்கள் அரசாங்கத்துடன் உடன்படாமல் இருக்கவும், தங்கள் குரலைக் கேட்கவும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம். ஆனால் நமது பொருளாதாரத்தையோ, நமது ஜனநாயகத்தையோ அல்லது நமது சக குடிமக்களின் அன்றாட வாழ்க்கையையோ முடக்க அவர்களுக்கு உரிமை இல்லை. அது நிறுத்தப்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.