கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை: மாணாக்கர்கள் அமைதி காக்க கர்நாடக உயர் நீதிமன்றம் வேண்டுகோள்…

பெங்களூரு: கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரித்தகர்நாடக உயர் நீதிமன்றம்  மாணாக்கர்கள் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தனர். சட்டம் ஒழுங்கை அனைவரும் ஒழுங்காக பராமரிக்கவும் அறிவுறுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரிஒன்றில், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த6 மாணவிகளும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலயில், மாணவிகளின் ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள், மாணவிகள்  காவித் துண்டு அணிந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்  பதற்றமான சூழல்ஏற்பட்டது. இதையடுத்துபல கல்லூரிகளிலும் இந்த பிரச்சினை ஏற்பட்டது. அதனால் பல கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பல வழக்குகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்து வரும்  நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித், ‘நாம் பகுத்தறிவின்படியும், சட்டத்தின்படியும் செல்வோம்,  உணர்ச்சிகளால் அல்ல.  அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். அரசியல் சாசனம் எனக்கு பகவத் கீதை போன்றது’ என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் ஒன்று. இது புனித குர்ஆன் வகுத்துள்ள ஒரு முக்கிய மத நடைமுறையாகும். அதனால் அதை அணிவதை தடை செய்யக்கூடாது, இதற்கு சான்றாக ஏராளமான தீர்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், நான் ஒரு பிராமணன், என் மகன் பள்ளிக்கு நாமம் அணிந்து செல்கிறான். இது பொதுஒழுங்கை பாதிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியதுடுன், ஹிஜாப் அணிந்து வருவதால், அது யாருக்கும் இடையூறு ஏற்படுத்துவதில்லை என்றும் கூறினார்.

இதையடுத்து,  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணாக்கர்கள் எந்த வகையிலான சீருடைகள் அணிய வேண்டும் என்பது தீர்மானிப்பது கல்லூரிகளை பொறுத்தது. இதில்  தளர்வு விரும்பும் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக் குழுவை அணுகி தீர்வு காண  வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் வழக்கறிஞர், வகுப்பறையில், ஹிஜாப் அணிந்த மாணவிகளை தனியாக அமரவைப்பது, மதம் சார்ந்த தீண்டாமை என்று  விமர்சித்தார்.

இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், இது ஆட்சேகரமான கருத்து என விமர்சித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  ‘அரசியலமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.  என்று தெரிவித்ததுடன், போராட்டம் நடத்துவது, வீதிக்கு செல்வது, கோஷம் எழுப்புவது, மாணவர்களைத் தாக்குவது, மாணவர்கள் பிறரைத் தாக்குவது, இவை நல்ல செயல் அல்ல.  நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்துகொண்டு இருக்கும்போதே, வளாகத்திற்குள்ளேயும் வெளியேயும் நிறைய கலாட்டாக்கள் நடைபெறுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார்.

வழக்கின் விசாரணை மீதமுள்ளதால் அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்’ என்று கூறி வழக்கு விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.