புதுடெல்லி,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த 1995ம் ஆண்டு முதன்முறையாக கே.எப்.சி. நிறுவனம் தனது உணவு விடுதி ஒன்றை திறந்து இந்திய வர்த்தகத்தில் நுழைந்தது.
அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனம் யம்! பிராண்ட்ஸ். பீட்சா ஹட் மற்றும் டேக்கோ பெல் ஆகிய பிரபல பிராண்டுகளுக்கும் சொந்தக்காரராக உள்ள இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாக கே.எப்.சி. செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் கே.எப்.சி. நிறுவனம் 450 மையங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் சமூக ஊடக கணக்கு ஒன்றில் காஷ்மீர், காஷ்மீரிகளுக்கே சொந்தம் என்ற சர்ச்சைக்குரிய வகையிலான பதிவு வெளியானது. இதற்கு பலத்த எதிர்ப்பு குரல் கிளம்பியது.
இதுபற்றி கே.எப்.சி. இந்தியா இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவுக்கு வெளியே செயல்பட கூடிய சில கே.எப்.சி. சமூக ஊடக பதிவில் வெளியான செய்திக்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.
இந்தியாவுக்கு கவுரவம் சேர்ப்பதுடன், இந்தியாவை நாங்கள் மதிக்கிறோம். அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையுடன் சேவை செய்வதற்கான எங்களுடைய முனைப்பில் தொடர்ந்து நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்து உள்ளது.
கார் விற்பனையில் இந்தியாவில் மாருதி நிறுவனத்துக்கு அடுத்ததாக நம்பர்-2 இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் பாகிஸ்தானிலும் தனது கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 5ந்தேதி பாகிஸ்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது.
அதில், “காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்கள் தொடர்ந்து வரும் சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பிப்ரவரி 5ந்தேதி பாகிஸ்தான் அரசு காஷ்மீர் ஒற்றுமை தினம் என கடைப்பிடித்து வருகிறது. இதற்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட பதிவு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு எதிரான குரல் வலுத்தது.
இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா அளித்த விளக்கத்தில், எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின் இந்திய மக்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக கே.எப்.சி. இந்தியா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.