’சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ – முதல்வர் ஸ்டாலினுக்கு கி.வீரமணி புகழாரம்

சென்னை: ஆறே நாட்களில் புயல் வேகத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்ட நடவடிக்கைகளை நேரலையில் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம். சமூகநீதி, பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமை, மாநில உரிமை, மக்களாட்சி உரிமை போன்ற பல தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியதாக முதல்வரின் உரையும், ஒருமித்த கருத்துகளை வழங்கிய மாண்பமை சட்டமன்ற கட்சித் தலைவர்களின் உரைகளும் அமைந்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட வரைவினை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கே திருப்பி அனுப்பியது வரலாற்றுக் குறிப்பாகும்.

திராவிடர் இயக்கம் – நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர்களும், பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் மறையவில்லை; வாழ்பவர்களே என்பதன் அடையாளம் இது! நம் கொள்கை லட்சியங்களாக தமிழ்நாட்டினர் நெஞ்சங்களில் உறைந்தனர் நிறைந்தனர் என்பதை நமது முதல்வர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என்ற வகையில் ஸ்டாலினின் உரை தெளிவாகப் பிரதிபலித்தது.

மறுமுறை காலந்தாழ்த்தாமல் புயல் வேகத்தில் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்ற சிறப்புக் கூட்டம்… இவற்றை ஆறே நாள்களில் கூட்டி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது அதிசயம் ஆனால், உண்மை! என்று வியக்கும் வண்ணம் வேக நடவடிக்கைகளாக நடந்தன.

சமூகநீதி, மாநில உரிமைக் கொள்கைகளை மீண்டும் பாய்ச்சலோடு வேகமெடுக்கச் செய்தமைக்கு ஆளுநரின் அரசமைப்புச் சட்ட மீறிய செயல் தூண்டுதலாய் அமைந்துள்ளது. மக்களாட்சி முறையோடும், மாண்போடும் உரிமைக் குரல் எழுப்பி, உறவுக்குக் கை கொடுக்கும் உயர் மனிதர்கள் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்பது அகிலத்திற்கும் அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம் பாராட்டுகிறோம்” என்று வீரமணி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.