நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நம்பிக்கை நட்சத்திரங்களாகக் களம் காணும் திருநங்கைகள்!

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற பிப்ரவரி 19-ம் தேதி வாக்கு பதிவு நடைபெறவிருக்கிறது. அதன்படி, மொத்தமுள்ள 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று (07/02/2022) பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்

இந்த தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணியுடனும், தனித்தும் களம் காண்கின்றன. இந்த சூழ்நிலையில் அந்தந்தக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் மக்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நா.த.க, ம.நீ.ம உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் போட்டியிட திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முக்கிய கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

நம்பிக்கை நட்சத்திரங்களாய் ஜொலிக்கும் திருநங்கை வேட்பாளர்கள்:

தி.மு.க சார்பில்…

வேலூர் மாநகராட்சியின் 37-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட 49 வயதான திருநங்கை கங்காவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2002 முதல் 20 ஆண்டுகளாக தி.மு.க-வில் உறுப்பினராக இருக்கும் கங்கா, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திருநங்கையர் நல வாரிய உறுப்பினராக இருந்திருக்கிறார். மேலும், தற்போது தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு செயலாளராக இருந்து, 50 பேர் கொண்ட கலைக்குழுவையும் நடத்தி வருகிறார்.

திருநங்கை கங்கா

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தனது சொந்த செலவில் மளிகைப் பொருட்கள், வேட்டி சேலைகள் என அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகக்கூறும் கங்கா, `தான் தேர்தலில் வென்றால் தனது வார்டில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவேன், மக்கள் நலப் பணித் திட்டங்களைக் கொண்டுவந்து திறம்பட செயலாற்றுவேன்’ என உறுதியளித்து, நம்பிக்கையுடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக சார்பில்…

சென்னை மாநகராட்சியின் 112-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட 32 வயதான திருநங்கை ஜெயதேவிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2008 முதல் அ.தி.மு.க. உறுப்பினராக இருக்கும் ஜெயதேவிக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் பெயர் வைத்திருக்கிறார். தேர்தலில் போட்டியிட தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு திருநங்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என பெருமிதமாகக் கூறும் ஜெயதேவி, `தான் வெற்றிபெற்றால் சாலை வசதி, சீரமைப்பு, மழை, வெள்ளநீர் வடிகால் பணிகளை தனது வார்டில் திறம்பட செயல்படுத்துவேன்’ எனக்கூறி மக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருநங்கை ஜெயதேவி

அதேபோல நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகிலுள்ள சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தின் 4-வது வார்டில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட திருநங்கை தேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பா.ஜ.க சார்பில்…

சென்னை மாநகராட்சி 76-வது வார்டில் பா.ஜ.க வேட்பாளராக திருநங்கை ராஜம்மா என்கிற ரதி போட்டியிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க உறுப்பினராக இருக்கும் ரதி, அக்கட்சியின் வடசென்னை மாவட்ட கலை கலாசார பிரிவு துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

திருநங்கை ராஜம்மா என்கிற ரதி

மக்களின் அன்றாடப் பிரச்னைகளை நன்கு அறிந்து வைத்திருப்பதாகக் கூறும் இவர்,`தான் வெற்றிபெற்றால் மத்திய, மாநில அரசு வழங்கும் திட்டங்கள், எங்கள் பகுதி மக்களுக்கு முறையாக சென்றுசேர உழைப்பேன் என்றும், மற்ற கட்சி நிர்வாகிகள் செய்யத்தவறியவற்றை தான் நிறைவேற்றிக்காட்டுவேன்’ என உறுதிகூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திருநங்கை சுஜாதா என்ற ஹர்சினி

ஹர்சினி, மதுரை மாநகராட்சி:

மதுரை மாநகராட்சியின் 94-வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட திருநங்கை சுஜாதா என்ற ஹர்சினிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்த ஹர்சினி, “மக்களுக்கு சேவை செய்வதற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன். நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றிபெறுவேன்” என நம்பிக்கை தெரிவித்து, வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ம.நீ.ம சார்பில்…

மதுரை மாநகராட்சி, லெட்சுமி புரம் 86-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் திருநங்கை பாரதி கண்ணம்மா. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, இந்தியாவிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். இந்த தேர்தலில், மனுதாக்கல் செய்யவந்த போதே, மீனாட்சி அம்மன் வேடத்தில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாரதி கண்ணம்மா, ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று நம்பிக்கையுடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மீனாட்சி அம்மன் வேடத்தில் திருநங்கை பாரதி கண்ணம்மா

நா.த.க சார்பில்…

வேலூர் மாநகராட்சியில், இரண்டு வார்டுகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 40-வது வார்டில் திருநங்கை ரஞ்சிதாவும், 41-வது வார்டில் திருநங்கை சபீணாவும் போட்டியிடுகின்றனர்.

திருநங்கை ரஞ்சிதா, திருநங்கை சபீணா

இந்திய குடியரசு கட்சி சார்பில்…

குடியாத்தம் நகராட்சி 31-வது வார்டில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் 33 வயதான திருநங்கை நிஷா போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் தவிர, சுயேச்சையாகவும் திருநங்கைகள் பலர் களம்காண்கின்றனர்.

சுயேச்சையாக…

தூத்துக்குடி மாநகராட்சியின் 50-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக திருநங்கை ஆர்த்தி களம் காண்கிறார். திருநங்கையான எனக்கு ஜாதி, மதம், இனம் என எந்த வேறுபாடும் கிடையாது. குடும்பம் குழந்தைகள் என எதுவும் இல்லாத எனக்கு என் வார்டு மக்கள்தான் குடும்பம். அவர்களின் தேவைகளைத் தெரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்ற முழுவீச்சுடன் பணியாற்றுவேன் எனக்கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருநங்கை ஆர்த்தி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சின் 10-வது வார்டில் சுயேச்சையாக திருநங்கை மானசா போட்டியிடுகிறார். தான் சார்ந்திருக்கும் திருநங்கை சமூகத்தினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், சமுதாயத்தில் தங்களுக்கென தனி பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காகவுமே இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறுகிறார் மானசா.

அதேபோல, வாணியம்பாடி நகராட்சி 20-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக திருநங்கை ஈஸ்வரி போட்டியிடுகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கைகள்போட்டியிட கட்சிகள் வாய்ப்பு வழங்கியிருப்பதையும், அதேசமயம் தாமாக முன்வந்து கட்சி சார்பிலும், சுயேச்சையாகவும் திருநங்கைகள் போட்டியிடுவதையும் `மாற்றத்திற்கான நம்பிக்கை நட்சத்திரங்கள்’ என பல்வேறு தரப்பினர் பாராட்டியும், வரவேற்றும் வருகின்றனர்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.