நீட் விலக்கு மசோதா: அரசியல் கண் துடைப்பிற்காகவே இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டம் – பாஜக குற்றச்சாட்டு

Anti NEET Bill Tamil Nadu BJP MLAs stage walkout : நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் அடையும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய திமுக கட்சி பொறுப்பேற்றுக் கொண்டவுடன் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. நீதியரசர் A.K. ராஜன் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழு இது குறித்து ஆராய்ந்து, விரிவாக அறிக்கை பெற்று, அதன் பின்பு தான் இந்த புதிய சட்ட முன்வடிவு 13.09.2021ல் ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த தீர்மானம் 18.09.2021 அன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், 142 நாட்களுக்கு பிறகு, சில காரணங்களைச் சுட்டிக்காட்டி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களின் மறுபரிசீலனைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பி வைத்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 200ன் படி சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அவருக்கு மேற்கொண்டு சந்தேகங்கள் எழும் பட்சத்தில் மீண்டும் சட்டமன்றத்திற்கு வரைவு அனுப்பி வைக்கப்படும். ஆனால் நீட் விவகாரத்தில் ரவி தன்னிச்சையாக செயல்பட்டது அனைத்து கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீதியரசர் தலைமையிலான உயர்மட்டக்குழுவின் அறிக்கை யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நீட் விலக்கு தொடர்பாக மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை துவங்கியது.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். ஆளுநரின் கருத்து, உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளது என்று கூறிய அவர், 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்பு சேர்க்கையை தமிழக அரசு நடத்தி வந்தது. நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளதால் பெரும்பாலான தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று குறிப்பிட்டார். உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்சநீதிமன்ற உத்தரவை ஆளுநர் சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பியது சரியான நடைமுறையல்ல என்றும் அவர் மேற்கோள்காட்டினார்.

இந்நிலையில் தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

“நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசால் இரண்டாம் முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இருக்கும்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தையே இன்று மீண்டும் சட்டமன்றத்தில் திமுக அரசு கொண்டுவந்துள்ளது. இது தேவைதானா என்று பாஜக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியது. நீட் தேர்வால் சமூக நீதிக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் ஆனால் இன்று நீட் தேர்வு, அனைத்து சமூகத்திற்குமான சமூக நீதி உறூதி செய்யப்பட்டே நடத்தப்படுகிறது. திமுக அரசு அரசியல் லாபத்திற்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம்” என்று பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் மாணவர்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர். அரசியல் கண்துடைப்புக்காகவே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது இதன் மூலம் மக்களுக்கும் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஏ.கே. ராஜன் குழு அறிவிக்கப்பட்ட போதே, அவர் நீட் தேர்வுக்கு எதிரான தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்த நிலையில் அவருடைய குழுவின் அறிக்கை எப்படி நியாயமாக இருக்கும். ஒருவேளை ஒருதலைபட்சமாக அவருடைய அறிக்கை இருக்க கூடும் என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.