நீர்நிலைகளை நிர்மூலமாக்கும் ஆகாய தாமரையில் புடவை தயாரிப்பு: ஜார்கண்டில் புதிய முயற்சி

ஜம்ஷெட்பூர்:  ஜார்கண்ட் மாநிலத்தில் ஆகாய தாமரை செடிகள் தற்போது புடவைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. ஆகாய தாமரை  ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் படர்ந்து வளரும் தாவரமாகும். இந்த செடிகள் நீரை ஆவியாக்கும் தன்மை கொண்்டவை. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரத்தின் வேர்கள் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலமாக தொடர்ந்து நீர் நிலைகளில் முழுவதுமாக பரவி விடுகின்றது. மிக கனமான, பசுமையான இலைகளை கொண்ட ஆகாய தாமரையின் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும். இந்த செடிகள் தண்ணீரை எளிதில் ஆவியாக்குவதால் குளம் குட்டைகள் விரைவில் வறண்டு விடும். எனவே. விவசாயத்துக்கு ஊறுவிளைவிக்கும் தாவரமாக இது கருதப்படுகின்றது. மேலும், நீரிலும் கடுமையான மாசுவை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த தாவரங்களை ஆடை தயாரிப்பில் பயன்படுத்தும் புதிய உத்தியை தொடங்கப்பட்டுள்ளது. ஆகாய தாமரையில் இருந்து எடுக்கப்பட்ட நாரில் இருந்து உருவாக்கப்படும் நூலானது, பருத்தியுடன் சேர்த்து ஆடை தயாரிப்பில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில், ஸ்வச்சதா புகாரே மற்றும் நேச்சர்கிராப்ட் ஆகிய 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இது தொடர்பாக ஸ்வச்சதா புகாரே இயக்குனர் கவ்ரவ் ஆனந்த் கூறுகையில், ”சணலில் இருந்து நூல் பிரித்தெடுக்கப்படுவது போலவே ஆகாயத் தாமரையில் இருந்தும் பிரித்தெடுக்கப்படும் நூலை பயன்படுத்தி முதலில் ஆயிரம் புடவைகளை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளோம். ஜூன், ஜூலை மாதத்தில் இந்த தயாரிப்புக்கள் சந்தையில் விற்பனைக்கு வரும். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பார்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கான். மச்சலந்தபூரில் பயன்படுத்தப்படாத 30-40 குளங்களில் இருந்து ஆகாய தாமரையை சேகரிப்பதற்கு 200 பெண்களை வேலையில் சேர்த்துள்ளோம். அவர்கள் இதனை சேகரித்து வருகின்றனர். இதன் மூலமாக, பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, நீர்நிலைகளும் சுத்தப்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.20 லட்சத்துக்கும் மேல் செலவாகும்,’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.