பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அடிமைச் சேவகம் செய்வதில் போட்டி போட்டவர்கள் – தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கடலூர்:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பிலான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி இருக்கிறோம். அதை ஆளுநருக்கு  மீண்டும் அனுப்பி வைத்திருக்கிறோம். 
ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், பட்டியலின பழங்குடி மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு தடை போடக் கூடிய, தடுப்பணையாக இந்த நீட் தேர்வு இருக்கிறது.
நீட் தேர்வு என்ற சதித் தேர்வை தலையாட்டி ஏற்றுக்கொண்டால், அடுத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இது மாதிரி தேர்வைக்கொண்டு வருவார்கள். கலைக் கல்லூரிகளுக்கும் கொண்டு வருவார்கள். 
அவர்கள் கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை என்பதே மாணவர்களை வடிகட்டுவதற்காகக் கொண்டு வரும் திட்டம்தான். ஒட்டு மொத்தமாக ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து கல்வி உரிமையைப் பறிப்பதற்காகத்தான் இது போன்ற கல்விக் கொள்கைகளை அமல்படுத்தத் துடிக்கிறார்கள். 
ஆயிரம் ஆண்டு அடிமைத்தனத்துக்குப் பின்னால் போராடிப் பெற்ற சமூகநீதியை நாம் யாருக்காகவும்,எதற்காகவும் விட்டுத் தர மாட்டோம் என்பதன் அடையாளமாகத்தான் இன்றைய தினம் நீட் விலக்கு சட்ட முன்வடிவை நிறைவேற்றி இருக்கிறோம்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக கெடிலம் மற்றும் பெண்ணையாற்றின் கரைகளை பலப்படுத்த 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை அரசின் பரிசீலனைக்கு வந்துள்ளது. 
இதேபோலத்தான் சென்னைக்கும் வாக்குறுதி தந்தோம். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல கடலூருக்கும் ஆலோசனைக் குழு அமைத்து நிரந்தரத் தீர்வு காண்போம். 
அறிவியல்பூர்வமான ஆய்வை இதற்காக மேற்கொள்வோம். நிரந்தரத் தீர்வை நிச்சயம் காண்போம் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
பாதாளச் சாக்கடை அமைக்கப்படாத கடலூரின் மற்ற வார்டுகளிலும் அதனை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் மேலாண்மைக் கழகத்தின் மூலமாக 180 கோடி ரூபாய் மதிப்பில் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்து விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது. 
வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக மழைநீர் வடிகால் கட்டும் பணி கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 சிப்பங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.அதிகமாக மழை நீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு கெடிலம் நதி மற்றும் தென் பெண்ணையாறு நதிகளுக்கு இடையில் 16 வார்டுகளில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். 
விடுபட்ட பகுதிகளில் வெள்ளத்தடுப்பு மழைநீர் வடிகால்களை 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு 78.85 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க கருத்துரு அரசிடம் பரிசீலனையில் உள்ளது. இது போன்ற பணிகளை ஒருங்கிணைத்து நிரந்தரத் தீர்வைக் காண்போம்.
தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம். அதனை நிச்சயமாகச் செயல்படுத்திக் காட்டுவேன். 
தமிழ்நாட்டு மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளைச் செய்வதற்காக 6500 கோடி ரூபாய் நிதி உதவி வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேட்டோம். இதுவரை கிடைக்கல. மூன்று மாதம் ஆகிவிட்டது. இதுதான் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதான அக்கறை ஆகும். 
தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் வணக்கம் என்றும் நன்றி என்றும் சொன்னால் போதுமா? அதனால்தான் தமிழ்நாட்டு மக்களும் பாஜகவுக்கு நன்றி வணக்கம் என்பதை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே தவிர வாக்களிப்பது இல்லை. 
நீங்கள் எங்களுக்கு வாக்களிக்காமல் போனாலும் பரவாயில்லை, தமிழ் நாட்டுக்கு எந்த நன்மையையும் செய்ய மாட்டோம் என்று அடம்பிடிக்கும் அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது.
ஆட்சியை இழந்த ஆற்றாமையில் நித்தமும் ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி. என்னைச் சர்வாதிகாரி என்கிறார் பழனிசாமி. அடுத்த நிமிடமே என்னை பொம்மை என்றும் சொல்கிறார். அவருக்கு சர்வாதிகாரி என்றால் என்ன என்பதும் தெரியவில்லை.
டெல்லியில் போராடும் விவசாயிகளைப் பார்த்து, அவர்கள் விவசாயிகள் அல்ல, தரகர்கள் என்று பழனிசாமி சொன்னதுதான் சர்வாதிகாரத்தனம். ஆம்புலென்ஸ் ஓட்டுநர்கள் சம்பள உயர்வு கேட்டபோது, எல்லாரும் சம்பளம் கூட்டிக் கேட்டால் எப்படித் தரமுடியும்? அவசரக் காலத்தில் வேலை செய்வதுதான் அவர்கள் பணியே என்று பழனிசாமி சொன்னதுதான் சர்வாதிகாரம். 
13 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதை டிவியைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று முதலமைச்சராக இருந்துகொண்டு சொன்னதுதான் சர்வாதிகாரத்தின் உச்சம். ஒன்றிய பாஜக அரசு சொன்னதற்கு எல்லாம் தலையாட்டி அவர்களின் பாதம் தாங்கிக் கிடந்த பழனிசாமியை விட தலையாட்டிப் பொம்மைக்கு உதாரணம் வேண்டுமா? பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அடிமைச் சேவகம் செய்வதில் போட்டி போட்டவர்கள். 
இன்று பதவி பறிபோனதும் ஊருக்கு அறிவுரை சொல்லி வருகிறார்கள் இருவரும். அ.தி.மு.க.தான் மக்களாட்சியைக் கொடுத்தது என்கிறார் பழனிசாமி. மக்களாட்சியை அதிமுக கொடுத்தால், அதற்கு மக்கள் ஏன் தோல்வியைக் கொடுத்தார்கள்?
அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என்று பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார். 2011 முதல் 2021 வரை பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தது அதிமுக. 2011 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலிலும் கொடுத்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
பழனிசாமி கொடுத்த செல்போன் உங்கள் ஊரில் யாரிடமாவது இருக்கிறதா? பெண்களுக்கு ஸ்கூட்டி கொடுப்பதாகச் சொல்லி 50 பேருக்குக் கொடுத்துவிட்டு கடையை மூடிய கம்பெனிதான் அதிமுக. திடீரென்று சீட்டுப் பிடிக்கும் கம்பெனிகள் உருவாகும். மக்களிடம் பணத்தை வசூல் செய்ததும் ஓடிவிடும். அப்படி ஓடும் கம்பெனிதான் பழனிசாமி – பன்னீர்செல்வம் கம்பெனி.அவர்கள் எங்களைப் பார்த்துக் குறை சொல்வதா? 
தேர்தல் வாக்குறுதிகளை அச்சிட்டுக் கொடுத்திருக்கிறேன். பெரும்பாலான வாக்குறுதிகளை எட்டே மாதத்தில் நிறைவேற்றி விட்டதாகத் துணிச்சலாக நான் சொல்கிறேன்.அந்தப் புத்தகத்தை வைத்துப் பாருங்கள். அதில் சொல்லாத பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். 
அனைத்தையும் ஒன்று விடாமல் நிறைவேற்றுவோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது ஒன்றுதான் எமது இலக்கு. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.