பிப். 11 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்தில், ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள, குண்டப்புராவில் உள்ள பியூ அரசுக் கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் காவித் துண்டு போன்ற உடைகளை அணிந்து வந்தனர். இதனால், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் வர விடாமல் கல்லூரி நிர்வாகம் தடுத்தது.

இந்த விவகாரம் தீவிரமானதை அடுத்து, “அமைதி, நல்லிணக்கம், சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் விதமான ஆடைகளை மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குள் அணிந்து வரக் கூடாது” என்று கர்நாடக மாநில கல்வித் துறை அறிவித்தது. பின்னர் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், சிவமோகா உட்பட மாநிலம் முழுவதும் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில், முஸ்லிம் மாணவர்களுக்கு போட்டியாக, இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவமோகாவில் உள்ள ஒரு கல்லூரியில், தேசியக் கொடியை அகற்றி காவிக் கொடியை மாணவர்கள் ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முஸ்லிம் மாணவி ஒருவர் மீது காவித் துண்டு அணிந்திருந்த நபர்கள் எச்சில் துப்பிய சம்பவமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த கர்நாடக மாநில உயர் நீதிமன்றம், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை, அடுத்த மூன்று நாட்களுக்கு மூட, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரிகளின் நிர்வாகங்கள் மற்றும் பொது மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும், அனைத்து முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.