மகாபாரதத்தில் பீமனாக நடித்த பிரவீன் குமார் காலமானார்

மும்பை: பிரபல நடிகரும், அர்ஜுனா விருது வென்ற விளையாட்டு வீரருமான பிரவீன் குமார் சோப்தி காலமானார். அவருக்கு வயது 74. பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் சீரியலில் பீமனாக நடித்த பிரவீன் குமார் சோப்தி சர்வதேச அளவில் புகழ் அடைந்தார். அந்த தொடருக்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பாடிகார்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ‘‘பீம் பாய்… பீம் பாய்… அந்த லாக்கரில் இருக்கும் பணத்தை எடுத்து அவினாசி நாய் மூஞ்சியில விட்டெறி’’ என்ற வசனம் மிகவும் பிரபலமானது. கமல்ஹாசன் சொன்னவுடன் மாடி ஜன்னலில் இருந்து கீழே குதிக்கும் உண்மையான பாடிகார்டாகவும் நடித்திருப்பார் பிரவீன் குமார் சோப்தி.1947ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி பிறந்த பிரவீன் குமார் சோப்தி, இந்தியில் ஜித்தேந்திரா நடிப்பில் வெளியான ரக்‌ஷா படத்தின் மூலம் அறிமுகமானார். ஏராளமான அமிதாப் பச்சன் படங்களிலும் இவர் நடித்துள்ளார். பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸில் தனது இளமைக்கால வாழ்க்கையை ஆரம்பித்த இவர், வட்டு எறிதல் வீரராக விளையாட்டுத் துறையிலும் அசத்தினார்.ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான பிரவீன் குமார் சோப்தி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 2013ம் ஆண்டு வாசிர்ப்பூர் தொகுதியில் தோற்ற இவர், பிறகு பாஜவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த சில நாட்களாக உடல்நிலை குன்றியிருந்த பிரவீன் குமார் சோப்தி, மும்பை வீட்டில் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் காலமானார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.