மருத்துவ படிப்பு பொதுக் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது.!

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது, முதல் நாளில் விளையாட்டு, முன்னாள் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இது முடிந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இந்த ஆண்டு பொதுப்பிரிவு கலந்தாய்வு இணைய தளம் வாயிலாக நடைபெறுகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு மொத்தம் 10 ஆயிரத்து 462 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 9,723 மாணவ மாணவிகள், தங்களுக்கான விருப்ப இடங்களை தேர்வு செய்திருந்தனர். விருப்ப இடங்களை தேர்வு செய்த பின் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

அந்த வகையில் இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மூன்று மையங்களை தேர்வு செய்ய மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களுக்கான பெயர் பட்டியல் www.tnmedicalselection.net என்ற  இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,923 எம்.பி.பி.எஸ். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,368 எம்.பி.பி.எஸ். இடங்கள், அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 155 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் சுய நிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,193 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 6,639 இடங்களுக்கு, தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 6 ஆயிரத்து 82 மாணவ மாணவியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.