மோசமான டிஜிட்டல் பணியிடமாக ஸொமேட்டோ தேர்வு: தவறை ஏற்றுக்கொண்ட தலைமைச் செயல் அதிகாரி 

செயலிகளைச் சார்ந்து இயங்கும் பணிகளில், இந்தியாவிலேயே மிக மோசமான டிஜிட்டல் பணியிடமாக ஸொமேட்டோ நிறுவனம் தர மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முழு பொறுப்பு தன்னுடையது என்று ஏற்றுக்கொண்ட அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் அடுத்த வருடம் இந்தச் சூழலை மேம்படுத்த சிறந்த முயற்சியைத் தருவோம் என்று கூறியுள்ளார்.

ஃபேர்வொர்க் இந்தியா என்கிற அமைப்பு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்கும் பணியிடங்களைப் பற்றிய ஆய்வினைச் செய்துள்ளது. இதில் சிறந்த, மோசமானப் பணியிடங்கள் என்ற தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் ஸொமேட்டோ, ஸ்விக்கி மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்கள் மிக மோசமான டிஜிட்டல் பணியிடங்களைக் கொண்டவை என்று பட்டியலிடப்பட்டுள்ளன. மூன்று நிறுவனங்களுமே 10 புள்ளிகளுக்கு 1 புள்ளியை மற்றுமே பெற்றுள்ளன. இந்தப் புள்ளிகள் முறையான சம்பளம், பணிச்சூழல், ஒப்பந்தம், நிர்வாகம் மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை வைத்து கணக்கிடப்பட்டுள்ளன.

“ஃபேர்வொர்க் இந்தியா மதிப்பீடில் ஸொமேட்டோவுக்குக் கடைசி இடம் கிடைத்துள்ளது. இன்னும் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் உள்ளன என்பது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால் திருத்திக் கொள்ள இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இதில் மிகக் குறைந்த அளவு புள்ளிகளைப் பெற்றுள்ளதற்கு ஸொமேட்டோவில் இருக்கும் நாங்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அடுத்த வருடம் இந்த மதிப்பீட்டில் சிறப்பான இடம் பெற எல்லா வித முயற்சிகளையும் செய்வோம்” என்று ஸொமேட்டோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் ட்வீட் செய்துள்ளார்.

இந்தப் பட்டியலில் அர்பன் நிறுவனம் முதலிடத்திலும், ஈகார்ட் நிறுவனம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. டன்ஸோ, க்ரோஃபர்ஸ் இரண்டு நிறுவனங்களும் தலா 4 புள்ளிகளையும், அமேசான், பிக் பேஸ்கெட், ஹவுஸ் ஜாய், ஓலா ஆகிய நிறுவனங்கள் தலா 2 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

“எந்த விதமானப் பணியாளராக இருந்தாலும் அவர்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் இருக்கிறது என்பதை இந்த கோவிட்-19 நெருக்கடி காலகட்டம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்த நெருக்கடி (பணியாளர்களுக்கு) ஏற்கெனவே இருந்த பிரச்சினையை எங்களது இந்த ஆய்வு இன்னும் துல்லியமாகக் காட்டியுள்ளது. பணியாளர்களால் ஏற்படும் செலவைத் தாண்டி அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாவது கிடைக்கிறதா என்பது குறித்து பல நிறுவனங்கள் தெளிவாகச் சொல்லவில்லை.

மேலும் இந்த நிறுவனங்கள் முன்வைக்கும் ஒப்பந்தங்கள் குறித்து பல பணியாளர்களுக்குச் சரியாகப் புரிவதில்லை. ஒப்பந்தம் நடக்கும் போது அதன் விதிகளும் அவர்களுக்குச் சரியாக விளக்கப்படுவதில்லை. எங்களது இந்த ஆய்வறிக்கையை வைத்து இந்த தளங்கள் / நிறுவனங்கள், இந்தியாவில் இந்தத் துறை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யும் என நம்புகிறோம்” என்று ஃபேர்வொர்க் இந்தியா குழு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.