'லவ் ஜிகாத்'துக்கு 10 ஆண்டு சிறை, இலவசமாக ஸ்கூட்டர், 2 சிலிண்டர் – உ.பி பாஜக தேர்தல் அறிக்கையின் அம்சங்கள்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘லவ் ஜிகாத்’ குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலுக்காக ஆளும் பாஜக ‘லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா 2022’ என்ற பெயரில் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் மவுரியா உள்ளிட்ட மாநில பாஜகவின் மூத்த தலைவர்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “பாஜக தனது 2017 தேர்தல் அறிக்கையில் கூறிய 212 வாக்குறுதிகளில் 92 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை நிறைவேற்றியுள்ளது” என்று தெரிவித்தார்.

பாஜகவின் உ.பி. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* விவசாயிகளுக்கு பாசனத்திற்கு இலவச மின்சாரம்.

* ரூ.25,000 கோடி செலவில் ‘சர்தார் வல்லபாய் படேல் விவசாய உள்கட்டமைப்பு மிஷன்’ விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமிக்க மாநிலம் முழுவதும் குளிர்பதன மையங்கள், குடோன்கள் அமைக்கப்படும்.

* கரும்பு ஆலைகளை நவீனப்படுத்த ரூ.5,000 கோடி செலவிடப்படும். மேலும் விவசாயிகளுக்கு கரும்புத் தொகையை 14 நாட்களில் வழங்கவில்லை என்றால், சர்க்கரை ஆலைகள் வட்டியுடன் நிலுவைத் தொகையை செலுத்த நடவடிக்கை.

* கோதுமை மற்றும் அரிசிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உருவாக்குதல்.

* மாநிலத்தில் 6 ‘மெகா உணவுப் பூங்காக்கள்’ உருவாக்கப்படும்.

* மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன வசதிகள் கொண்ட ஓர் அரசு மருத்துவமனை கட்டப்படும்.

* கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ‘ராணி லட்சுமிபாய் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும்.

* ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு ரூ.1 லட்சம் வரை நிதியுதவி.

* பெண் குழந்தைகளின் கல்வி திட்டமான ‘முக்கிய மந்திரி கன்யா சுமங்கலா யோஜனா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி ரூ.15,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும்.

* இதேபோல், `சுவாமி விவேகானந்த் யுவ ஷசக்திகரன் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இரண்டு கோடி டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும்.

* பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் CCTV கேமராக்கள் பொருத்தப்படும். 3000 பிங்க் போலீஸ் (பெண் போலீஸ்) பூத்கள் அமைக்கப்படும்.

* ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு வேலை வாய்ப்பு.

* உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் (ஹோலி மற்றும் தீபாவளிக்கு தலா ஒன்று) வழங்கப்படும்.

* 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பொது போக்குவரத்து பயணம்.

* தொடக்கப் பள்ளிகளில் மேஜை, பெஞ்சுகள் போன்ற தளபாடங்கள் தயாரிக்க ‘மிஷன் காயகல்ப்’ தொடங்கப்படும்.

* மாநிலத்தின் 30,000 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நவீனமயமாக்கப்படும்.

* மாநிலத்தின் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்குவது.

* ரூ.10 லட்சம் கோடி வரை முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை.

* கணவரை இழந்தோருக்கான ஓய்வூதியம் மாதம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் போன்ற வாக்குறுதிகளோடு, ‘லவ் ஜிஹாத்’தையும் தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளது பாஜக.

அதன்படி, பாஜக உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘லவ் ஜிஹாத்’ செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.