“உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் மிகப்பெரிய பின் விளைவுகள் ஏற்படும்” – அமெரிக்க அரசு

வாஷிங்டன்,
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேட்டோ, மேற்கத்திய கூட்டணி இணைந்து அட்ரியாடிக் கடல் பகுதியில் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் துருக்கியின் தென் பகுதியில் பயிற்சிகளை மேற்கொள்ள ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் போஸ்போரஸ் நீர்வழித்தடத்திற்கு இரவு வேளைகளில் செல்கின்றன. 
மேலும் உக்ரைன் மீது முழுமையாக படையெடுப்பதற்கு தேவையான ராணுவ படைகளில் 70 சதவீதத்தை ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால் ரஷ்யாவின் கூற்றை நம்ப நாங்கள் தயாராக இல்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பெரிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, “ரஷ்யாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. ரஷ்ய அதிபர் புதின் என்ன செய்வார் என்ற முன்னறிவிப்பு எதுவும் எங்களிடம் இல்லை.  ரஷ்யாவின் கூற்றை நம்ப நாங்கள் தயாராக இல்லை. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் மிகப்பெரிய பின் விளைவுகள் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.