கமல்ஹாசன் பட ‘பீம் பாய்’ திடீர் மரணம்: மகாபாரதத்திலும் பீமனாக நடித்தவர்

கமல்ஹாசன் நடித்த வெற்றிப் படமான ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படத்தில் 7 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக பீம் பாய் வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் திங்கள்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 74.

இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கிரேஸி மோகனின் நகைச்சுவை வசனத்தில் எடுக்கப்பட்ட ‘மைக்கேல் மதன காம ராஜன்’ இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தில், கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்திருந்தார். அதே போல, இந்த படத்தில், கமல்ஹாசனுக்கு பாடிகார்டாக நடித்த 7 அடி உயரம் ஆஜானுபாகுவான தோற்றத்தில் பீம் பாய் வேடத்தில் நடித்த அந்த நடிகரை யாராலும் மறக்க முடியாது. அவர்தான் நடிகர் பிரவீன் குமார் சோப்தி. இவருடைய 7 அடி உயரம் ஆஜானுபாகுவான தோற்றமே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.

‘மைக்கேல் மதன காம ராஜன்’ படத்தில் கமல்ஹாசன், பீம் பாய்… பீம் பாய்… அந்த லக்கரில் இருக்கும் பணத்தை எடுத்து அவிநாசி நாய் மூஞ்சியில வீசி எறி” என்கிற வசனமும் பீம் பாய், பிரவீன் குமார் சோப்தி மாடி ஜன்னலில் இருந்து குதிப்பதையும் ரசிகர்கள் மனதில் நிலைத்துவிட்டவை.

கமல்ஹாசனுடன் ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படத்தில் நடித்த பிறகு, பிரவீன் குமார் சோப்திக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன.

அதற்கு பிறகு, இயக்குனர் பி.ஆர். சோப்ராவின் மகாபாரத சீரியலில் பீமனாக நடித்த பிரவீன் குமார் சோப்தி சர்வதேச அளவில் புகழ் பெற்றார். அவருடைய தோற்றம் மகாபாரத பீமனை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. மகாபாரதத் தொடருக்குப் பிறகு ஏகப்பட்ட திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரவீன் குமார் சோப்திக்கு கிடைத்தது. அதற்கு முன்னர், அவர் பெரும்பாலும் ஹீரோவிடம் அடிவாங்கும் அடியாளாகவே நடித்திருந்தார்.

தமிழ் சீனிமாவில் பீம் பாய், மகாபாரத சீரியலில் பலசாலி பீமன் என்று ரசிகர்களின் மனதில் நிலைத்துவிட்ட பழம்பெரும் நடிகர் பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 74.

1947ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி பிறந்த பிரவீன் குமார் சோப்தி பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸில் வாழ்க்கையை தொடங்கினார். அதோடு, இவர் சிறந்த வட்டு எறியும் வீரருமாவார். பிரவீன் குமார் சோப்தி விளையாட்டில் சாதித்ததற்காக அர்ஜுனா விருதும் பெற்றுள்ளார்

பிரவீன் குமார் சோப்தி முதன் முதலில் ஜித்தேந்திரா நடிப்பில் வெளியான ரக்‌ஷா படத்தின் மூலம் அறிமுகமானார். அமிதாப் பச்சனுடைய பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிரபலமான பிரவீன் குமார் சோப்தி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 2013ம் ஆண்டு வாசிர்ப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தர். பின்னர், பாஜகவில் சேர்ந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில், கமல்ஹாசன் படத்தின் பீம் பாய்யாக நிலைத்துவிட்ட பிரவீன் குமார் சோப்தியின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரவீன் குமார் சோப்தியின் மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.