பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவிக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் மாண்டியாவில் காவித்துண்டு அணிந்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டவர்களுக்கு மத்தியில் அல்லாஹு அஃபர் என இஸ்லாமிய மாணவி துணிச்சலாக பதில் முழக்கமிட்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது. மாண்டியாவில் உள்ள பி.ஈ.எஸ். கல்லூரியில் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக இந்து அமைப்பு மாணவர்கள் காவித்துண்டு போராட்டம் நடத்தி கொண்டிருந்திருந்தனர். அப்போது இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து இருசக்கர வாகனத்தில் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து ஜெய் ஸ்ரீராம்..ஜெய் ஸ்ரீராம்..என்று முழக்கமிட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சூழ்ந்து நின்ற மாணவர்களை சிறிதும் அச்சமின்றி எதிர்கொண்ட மாணவி, அல்லாஹு அஃபர் என பதில் முழக்கம் எழுப்பினார். இதையடுத்து அந்த பெண்ணை விரைந்து வந்து கல்லூரி விரிவுரையாளர்கள் அழைத்து சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாணவியின் துணிச்சலை பாராட்டி Jamiatul Ulema-e-Hind அமைப்பின் தலைவர் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவிக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வீரமங்கை முஸ்கானுக்கு தமுமுகவின் பாத்திமா ஷேக் விருது வழங்கப்படும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அறிவித்துள்ளார். குடிமக்களுக்கு அரசியலமைப்பு தந்துள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலில் சங்பரிவார சக்திகள் ஈடுபடுவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் சங்பரிவார கும்பல் தொடர்ந்து சீண்டி வருகிறது. முஸ்லிம் மாணவிகள் தங்கள் பண்பாட்டு உடையான ஹிஜாபை அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டின் மதசார்பற்ற சக்திகளும் நடுநிலையான சான்றோர் பெருமக்களும் ஓரணியில் திரண்டு இருப்பது வரவேற்புக்குரியது என்றும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ குறிப்பிட்டிருக்கிறார்.