சாலைப் பராமரிப்புகளை மாநில அரசுதான் செய்யவேண்டும்: மக்களவையில் கனிமொழி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில்

புதுடெல்லி: மத்திய அரசிடம் தமிழகத்தின் கிராமப்புற சாலைகளை சீரமைப்பது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பிய நிலையில், ‘அது மாநில அரசின் பொறுப்பு’ என்று கூறி மத்திய இணை அமைச்சர் ஃபகன்சிங் குளஸ்தே பதில் கொடுத்துள்ளார்.

பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, கடந்த 2021 நவம்பரில் பெய்த பருவ மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக இன்று திமுகவின் மக்களவைத் துணைத் தலைவர் கனிமொழி, “கிராமப்புற சாலைகளின் சேதம் பற்றிய மதிப்பீட்டை ஒன்றிய அரசு மேற்கொண்டு இருக்கிறதா? அப்படி மேற்கொண்டிருந்தால் சேத மதிப்பீடு என்ன? மதிப்பீடு செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், “மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்படி அமைக்கப்பட்ட சாலைகளை பழுதுபார்க்க கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?” எனவும் கனிமொழி வினவியிருந்தார்.

இந்தக் கேள்விக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஃபகன்சிங் குலஸ்தே, “பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் என்பது கிராமப்புற இந்தியாவின் போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்துவதற்கானது. கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான ஒரு சிறப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு தான் உள்ளது. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் அனைத்து சாலைகளும் முதல் ஐந்தாண்டு காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகான சாலை பராமரிப்பு பணிகளுக்கான நிதி சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஊரக சாலை மேம்பாட்டு முகமைகளால் வழங்கப்பட வேண்டும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சாலைகளை பழுது பார்க்கவோ மறுநிர்மாணம் செய்யவோ ஒன்றிய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. இதுதொடர்பான அனைத்து பணிகளும் தொடர்புடைய மாநில அரசுகளாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.