நாகர்கோவில்: தனித்துப் போட்டியிடும் சி.பி.எம் கட்சிக்கும் சேர்த்து வாக்கு சேகரித்த கே.எஸ்.அழகிரி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கன்னியாகுமரி மாவட்டம் வந்திருந்தார். நாகர்கோவிலில் பிரசாரத்தைத் தொடங்கிய கே.எஸ்.அழகிரி வேப்பமூடு சந்திப்பில் நாகர்கோவில் மாநகராட்சி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். கே.எஸ்.அழகிரி பேசும்போது, “நாடாளுமன்றத்தில் பிரதமர் மேடைப்பேச்சாளர் போன்று பேசியிருக்கிறார். நேரு, மொராய் தேசாய், இந்திராகாந்தி, மன்மோகன்சிங் போன்ற பெருமைமிக்க தலைவர்களை பார்த்த நாடாளுமன்றத்தில் கீழ்த்தரமாக பிரதமர் மோடி பேசியுள்ளார். வருங்கால இந்திய சமுதாயம் மோடி பேச்சை படித்துபார்த்தால் இவ்வளவு கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் என்று நினைப்பார்கள். நேரு காலமாக இருந்தாலும் சரி சோனியாகாந்தி காலமாக இருந்தாலும் காங்கிரஸில் ஜனநாகம் இருந்தது.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நிகழ்ச்சிகளில் ஐந்து நிமிடம் முன்பு சோனியாகாந்தி வருவார். மன்மோகன்சிங் காரில் இருந்து இறங்கினால் சோனியாகாந்தி எழுந்து நிற்பார். கட்சித் தலைவராக இருந்த சோனியாகாந்தி பிரதமருக்கு மரியாதை கொடுத்தார். மோடி அவர் தலைவர் அத்வானிக்கு முன் மைக் எடுத்து வைத்தார். ஆனால், இன்று பிரதமராக இருக்கும் மோடி அத்வானியை கண்டுகொள்ளவில்லை. நீங்கள் உங்கள் தலைவருக்கு தரும் மரியாதை இதுதான். இதையெல்லாம் மறந்து காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகத்தைப்பற்றி பேசுகிறார். இந்த தேசத்தின் கலாசாரத்தை சிதைக்க பா.ஜ.க வந்திருக்கிறது.

காந்தி, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி ஆகியோர் நாட்டுக்காக கொல்லப்பட்டார்கள். தியாகம் செய்வது நாங்கள் அரியணையை அலங்கரிப்பது மோடி என்றால் காங்கிரஸ் தொண்டனால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என ஆவேசமாக பேசினார். பின்னர் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கும்போது, “காங்கிரஸ் கட்சியின் பெருமை வாய்ந்த இந்த மாவட்டத்தில் கை, உதயசூரியன், பம்பரம், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம், கதிர் அரிவாள் சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிப்பெற செய்யுங்கள். நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதைவிட, உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்” என பேசினார்.

காங்கிரஸ் பிரசார கூட்டம்

நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டுகளில் காங்கிரஸ், தி.மு.க கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. அதில், காங்கிரஸுக்கு 13 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து சி.பி.எம் 9 வார்டுகாலில் தனித்து களம்காணுகிறது. 2, 11 ஆகிய வார்டுகளில் நேரடியாக காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து சி.பி.எம் போட்டியிடுகிறது. மற்ற 7 வார்டுகளில் தி.மு.க வேட்பாளர்களை எதிர்த்து களம் காணுகிறது. நாகர்கோவிலில் மட்டுமல்ல குழித்துறை நகராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சி.பி.எம் தனியாக போட்டியிடுகிறது. இந்த நிலையில், சி.பி.எம் கட்சியின் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்துக்கு கே.எஸ்.அழகிரி வாக்கு கேட்டது காங்கிரஸ் வேட்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. `ஒரே வார்டில் கை-க்கும், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்துக்கும் ஓட்டுப்போட முடியுமா தலைவரே’ என கிண்டலடித்தபடி கலைந்து சென்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

Also Read: மறுக்கப்பட்ட கவுன்சிலர் சீட்; காங்கிரஸ் அலுவலகத்தில் அறவழிப் போராட்டம் நடத்திய முன்னாள் கவுன்சிலர்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.