பிரதமரின் பேச்சு: சொன்னதும் சொல்ல மறந்ததும்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திங்களன்று ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாகப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

ராகுல் காந்தி உட்படப் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் குறிப்பான பிரச்சினைகள் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. அவரது பதில் எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடுவதாக இருந்தது. ராகுல் காந்தி எழுப்பிய
வேலையின்மை
, கூட்டாட்சி கொள்கைக்கு ஆபத்து, நாட்டின் அடிப்படை அமைப்புகளின் சீர்குலைவு ஆகியவை பற்றி அவர் பதில் ஏதும் பேசவில்லை.

தொலைக்காட்சி விவாதத்திற்கு வரும் பாஜக ஆதரவாளர்கள் நடப்புப் பிரச்சினையான விலைவாசி உயர்வு, பணவீக்கம், கேஸ் விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, முந்தைய பணமதிப்பழிப்பு தோல்வி, ஜிஎஸ்டி அமலில் ஏற்பட்ட பாதிப்புகள் போன்றவற்றிக்கு எப்படி பதில் அளிப்பார்கள்? ஐம்பது ஆண்டுகளாக ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று நேரு காலத்தில் இருந்து துவங்குவார்கள். பிரதமரும் அதற்கு விதிவிலக்கல்ல.

அதிக பணவீக்கம், அதிகரித்துவரும் வேலையின்மை, கோவிட் தொற்றுநோயைத் தவறாக நிர்வகித்தது ஆகியவை குறித்து அவர் எதையும் பேசவில்லை. தொற்றுநோயை நிர்வகித்ததில் இந்தியா உலகிற்கே முன்னோடியாக இருந்தது என்றார்.

அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றாச்சாட்டுகளை எதிர்ப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எவற்றையும் அவர் தரவில்லை. அவரது பேச்சு உணர்ச்சிகரமான தேர்தல் பிரச்சாரமாகவே இருந்தது.

பணவீக்கம் பற்றி

இந்தியப் பொருளாதாரத்தில் பணவீக்கம் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றி மோடி நேரடியாகப் பேசவில்லை. மாறாக, உலகெங்கிலும் உள்ள பொருளாதார நெருக்கடியைக் குறிப்பிடுகிறார். அத்தகைய உலகப் பிரச்சினை எப்படி உள்நாட்டில் பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிய ஜவஹர்லால் நேருவின் மேற்கோள் ஒன்றைக் காட்டுகிறார். பணவீக்கம் குறித்து நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் அது உலகப் பிரச்சினை, நேருவே அதைக் கூறியிருக்கிறார் என்பது என்ன வகையான பதில்? மோடி தனது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை பணவீக்கத்தை முதல் பிரச்சினையாக எடுத்துள்ளது என்று கூறினார். அதற்கு அவர் எந்தத் தரவையும் விவரங்களையும் முன்வைக்கவில்லை.

பொத்தாம்பொதுவாக பாஜக சாமனிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதலீடு செய்துள்ளது என்றார். என்ன பிரச்சினைக்கு என்ன முதலீடு, என்ன வழி, எப்படி தீர்க்கப் போகிறார்கள் என்பது குறித்து எதுவுமில்லை.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்ததாகவும் தனது ஆட்சியில் அது ஒற்றை இலக்கத்தில் இருப்பதாகவும் பெருமைப்பட்டுக்கொண்டார். அமெரிக்காவிலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலும் பணவீக்கம் 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது எனவும் தனது அரசு அதை 5.2 சதவீதமாகக் குறைத்தது எனவும் கூறினார். உண்மையில் பணவீக்கம் குறித்த கணக்கீடுகளை அரசு மாற்றியமைத்தது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. அதை எதிர்க்கட்சிகளும் பல பொருளாதார வல்லுநர்களும் விளக்கியிருக்கின்றனர். புள்ளிவிவரங்களை அரசுக்கு நட்பாக்கும் வித்தை பாஜக அரசிற்கு நன்கு தெரிந்த ஒன்று. உண்மையில் இந்தியாவின் பணவீக்க மதிப்பு மிக அதிகம். அதன் காரணமாகவே விலைவாசி மிகவும் உயர்ந்திருக்கிறது. அன்றாட மளிகைப் பொருட்களிலிருந்து எரிபொருள்வரை கடந்த சில வருடங்களில் சில மடங்கு விலை உயர்ந்திருக்கிறது.

வேலையின்மை பற்றி

(PTI Photo)

வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கும் முக்கியமான பிரச்சினையில், பணமதிப்பு நீக்கம், குறைபாடுள்ள சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, சிறு குறு நடுத்தரத் தொழில்துறைகளுக்கு ஆதரவின்மை போன்றவையே காரணம். இதற்கு கடந்த சில ஆண்டுகளில் மோடி அரசாங்கம் எடுத்த முடிவுகள் மிகப்பெரிய வேலையின்மையைத் தூண்டுவதற்கு முதன்மைக் காரணம் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை மோடி முற்றிலும் புறக்கணித்தார். முக்கியமாக கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்திருப்பது குறித்து அவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

முந்தைய அரசாங்கங்கள் அரசு மட்டுமே மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளன என்று மோடி கூறினார். இதன் மூலம் போதிய வேலை வாய்ப்புகளைத் தன் அரசாங்கம் உருவாக்கத் தவறியதற்கு மோடி பொறுப்பேற்க மறுக்கிறார். அதாவது அவரது அரசாங்கம் ஏழைகளை லட்சாபதிகளாக – முதலாளிகளாக – மாற்றியதாம். வேலையின்மை அதிகம் இருக்கும் நாட்டில் ஏழைகள் லட்சாதிபதிகளாக மாறினார்கள் என்பது குரூரமான நகைச்சுவையன்றி வேறென்ன?

அரசாங்கமே எல்லாம் செய்யும் என்று எதிர்க்கட்சிகள் உருவாக்கியிருக்கும் எண்ணம் இந்திய இளைஞர்களின் திறமைக்கும் கனவுகளுக்கும் தடையாக உள்ளது என்றார் மோடி. அரசாங்கம் எல்லாவற்றையும் செய்ய வேண்டியதில்லை என்று அவர் கூறினார். அதாவது வேலை இல்லை என்று கேட்டால் நான் எல்லாரையும் முதலாளிகளாக மாற்றும் திட்டத்தை அமல்படுத்துகிறேன் என்பதுதான் இதன் பொருள்.

எவ்வாறாயினும், வேலைவாய்ப்பை உருவாக்கும் சாத்தியமுள்ள தனது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மோடி பட்டியலிட்டார். அந்த நடவடிக்கைகள் இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு ஏழைகளாக இருக்கும் மக்களுக்கு நிலையான, தரமான வேலைகளை எவ்வாறு கொண்டுவரும் என்பதில் தெளிவில்லை. சகல பாக்கியமும் பெற்று நீடுழி வாழ்க என்று பெரியவர்கள் வாழ்த்துவதால் வாழ்க்கை அப்படி மாறிவிடுவதில்லை. அதற்குக் குறிப்பான உதவிகளும், வழிகாட்டுதல்களும் வேண்டும். மோடி அப்படி எதையும் குறிப்பாகப் பேசவில்லை.

தற்போதைய சூழ்நிலையில் MSMEகளின் மோசமான நிலை குறித்து தனது உரையில் பேசிய ராகுல் காந்திக்கு மோடி பதில் அளித்தார். அதில் தனது அரசாங்கம் MSME மற்றும் ஜவுளித் துறைகளுக்கு “தேவையான” ஆதரவை அளித்துள்ளது என்றார். வரி அமைப்பை எளிதாக்கியிருக்கிறோம் என்றார். ஆனால் மூடப்பட்ட சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மற்றும் லட்சக்கணக்கான வேலையிழப்புகள் பற்றி அவர் விவரங்கள் எதையும் அளிக்கவில்லை. அந்தக் குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்கவில்லை. பொத்தாம்பொதுவாக இத்துறைகளைக் காப்பாற்றி 23 கோடி வேலைகளைக் காப்பாற்றியுள்ளோம் என்றார். அதற்கான விரிவான விவரங்களை அவர் கூறவில்லை.

விவசாயச் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெற்றது. ஆனால் சிறு விவசாயிகளுக்குப் பயனளிக்கும் விவசாயச் சீர்திருத்தங்களை தனது அரசாங்கம் எடுத்ததாகவும், ஆனால் எதிர்க்கட்சிகளின் வெறுப்பு விவசாயிகளை தூண்டிவிட்டு எதிர்க்க வைத்ததாகவும் மோடி கூறினார். பழமையான கிராமப்புறப் பொருளாத்திற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று குற்றம் சாட்டினார். விவசாயிகள் 700க்கும் மேல் இறந்து ஓராண்டுக்கும் மேலாகப் போராடியதை அவர் எதிர்க்கட்சிகள் சதி என்று கடந்து போனார். இறந்துபோன விவசாயிகள் எனக்காகவா இறந்துபோனார்கள் என்று மேகாலயா கவர்னரிடம் கேட்டவரும் இதே மோடிதான்.

2014ஆம் ஆண்டுக்கு முன் 500க்குக் கீழ் இருந்த புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை இப்போது 7,000ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார் மோடி. இவை பன்னாட்டு நிறுவனங்களாக வளரும் தகுதி கொண்டிருக்கின்றன என்று அவர் பெருமைப்பட்டார். ஆனால் மோடியின் ஆட்சிக் காலத்தில்தான் பெரும் பணக்காரர்கள் அதிகம் தோன்றியிருப்பதும், செல்வத்திலும் வருமானத்திலும் சமத்துவமின்மை அதிகரித்திருப்பதும் கண்கூடு. அவற்றைப் பற்றி அவர் ஏதும் சொல்லவில்லை. மேலும் தனது ஆட்சியின்போது துரிதப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களைப் பட்டியலிட்டார். அவற்றால் எளிய மக்களுக்கு என்ன பலன் என்று அவர் தெரிவிக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீடு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் இப்போது இருப்பதாகவும் பிரதமர் கூறினார். இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை மேம்படுத்துவதில் தனது அரசாங்கத்தின் கவனம் உள்ளது என்று அவர் மேலும் கூறினார். இருப்பினும் புள்ளிவிவரங்கள் இரண்டு துறைகளிலும் வேறுவிதமாகக் கூறுகின்றன. அவற்றை அவர் மறுத்துப் பேசவில்லை. அல்லது விரிவான புள்ளிவிவரங்கள் எவற்றையும் கொடுக்கவில்லை.

பின்னர், முத்ரா யோஜனாவின் வெற்றியைப் பற்றி அவர் பேசினார், இருப்பினும் புள்ளிவிவரங்கள் மாறுபட்ட பார்வையை வழங்குகின்றன. தெருவோர வியாபாரிகளுக்கு ஊக்கமளிக்கும் சிறுகடன் திட்டம் – PM SVANidhi திட்டத்தைப் பற்றியும் அவர் பேசினார், இருப்பினும் செப்டம்பர் 2021 நிலவரப்படி 11% விற்பனையாளர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்ததாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன

சுருக்கமாக, தனது அரசாங்கம் இந்தியாவின் முன்னேற்றத்தில் தனியார் துறையைப் பங்குதாரராக்கியுள்ளதாகவும், காங்கிரஸைப் போலல்லாமல், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சுரங்கத் துறைகளை வழிநடத்த தொழில்முனைவோரை ஊக்குவித்துள்ளதாகவும் அவர் கூறினார். மோடி பேசியதில் இதில்தான் ஓரளவு உண்மை இருக்கிறது. அவரது ஆட்சிக் காலத்தில் பெரும் முதலாளிகள் பெரும் பயனடைந்துள்ளனர். அவர்களது செல்வம் உலகப் பணக்காரர்களது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனால் வேலை வாய்ப்பை இழந்த சாமானிய மக்களின் பட்டியலோ இதைவிட நீளமானது.

தொற்றுநோய் மேலாண்மை குறித்து

(RSTV/PTI Photo)

இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவலைத் தூண்டியதற்காக காங்கிரஸையும் ஆம் ஆத்மி கட்சியையும் குற்றம் சாட்டிப் பேசினார் பிரதமர். அவரது உரையின் கணிசமான பகுதி இதற்காக ஒதுக்கப்பட்டது. சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிர அரசும் ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசாங்கமும், திடீர் பொது முடக்கத்தை எதிர்கொண்டு தங்கள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய தினசரி கூலித் தொழிலாளிகளுக்கு ரயில், பேருந்து டிக்கெட்டுகளை வழங்கியதாகப் பிரதமர் குற்றம் சாட்டினார். இதன் மூலம் கொரோனா பல மாநிலங்களுக்கு பரவியதாக குற்றம் சாட்டினார்.

பிரதமரைத் பொது முடக்கத்தை அறிவித்ததும் உணவின்றி, ஊதியமின்றி தொழிலாளிகள் தவித்ததார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உதவியதையும் அவர் குறை கூறினார். பிரதமர் முதல் பொது முடக்கத்தை நான்கு மணிநேர அவகாசத்தில் அறிவித்தார். அது அமல்படுத்தப்படுவதற்கு நான்கு மணிநேரத்திற்கு முன்பே பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நெருக்கடியில் தள்ளப்பட்டனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேமிப்பில் வைப்பதற்காகக் கடைகளை மொய்த்த மக்களால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இந்த அறிவிப்புதான் சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய இடம்பெயர்வுகளை ஏற்படுத்திய ஒன்றாகும். வேலையும் தங்குமிடமும் இல்லாமல் தவித்த தினக்கூலிகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லத் தொடங்கினர். இத்தகைய நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட சிவசேனா-காங்கிரஸ்-என்சிபி, ஆம் ஆத்மி அரசுகள் மட்டுமின்றி, உத்திரப் பிரதேச பாஜக அரசும், பிகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் கூடுதலான குழப்பத்தைத் தடுக்கப் பேருந்துகளை ஏற்பாடு செய்தது பிரதமருக்கு நினைவிருக்கலாம். செய்யத் தவறிய முன்னேற்பாடுகளை மறந்துவிட்டு கோவிட் பரவலுக்கு எதிர்க்கட்சிகளைக் காரணம் காட்டினார் பிரதமர். ஆக்சிஜன் பற்றக்குறை, கங்கையில் பிணங்கள் மிதந்தது எல்லாம் யாரால் என்பது உலகிற்கே தெரியும். உலக ஊடகங்கள் அத்தனையிலும் பிரதமர் மோடியின் தவறான கோவிட் நிர்வாகம் கடுமையாக விமரிசிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் அவர் உரையின் மீது குறுக்கிட்டு குறிப்பான பதில்களைக் கேட்டபோது நாடாளுமன்றத்தின் புனிதத்தை அவர்கள் கெடுத்துவிட்டு அரசியல் பிரச்சார மேடையாக மாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டினார்.

மோடியின் பாஜக பல்வேறு மாநிலங்களில் மதங்களை வைத்து நாட்டு மக்களைப் பிரிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. பிரதமரோ காங்கிரஸ் பிரிட்டீஷாரின் பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுவதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிழந்து பல பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இனிமேலும் அவர்களால் அங்கே ஆட்சியில் அமர முடியாது என்றவர் தனது சொந்தக் கட்சி ஆட்சிக்கு வருமென்று சொல்லவில்லை. காங்கிரசாவது தமிழகத்தை ஆளும் திமுகவின் கூட்டணியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் பதவி இழந்ததைக் குறிப்பிட்டவர் இனி 100 ஆண்டுகளானாலும் காங்கிரசு பதவிக்கு வர முடியாது என்றார்.

பதில் ஏதும் இல்லை

நாட்டின் அடிப்படை அரசியல் சாசன அமைப்புகள் சீர்குலைவுக்குள்ளானது குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு எந்த பதிலையும் அவர் அளிக்கவில்லை. அதே போல கூட்டாட்சி கொள்கைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து பற்றிய ராகுலின் விரிவான விமர்சனத்திற்கும் பதிலில்லை.

மோடியின் பேச்சைச் சுருக்கினால் அவர் சாலைகள், பாலங்கள், ஆலைகள் கட்டித் தொழில்துறையை ஊக்குவித்தார். கோவிட் நிர்வாகத்தை உலகம் பாராட்டும் விதத்தில் செய்தார். இளைஞர்களை முதலாளிகளாக்கினார். ஏழைகளை லட்சாதிபதிகளாக்கினார். காங்கிரஸ் இனி ஆளவே முடியாது.

ராகுல் காந்தியின் அர்த்தமுள்ள உரைக்கு முன் பிரதமரின் உரையை ஒப்பிட்டால் அது தேர்தல் கால சவடால் பேச்சு என்றே சொல்லலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.