ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு- ஐகோர்ட் உத்தரவு

சென்னை:

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 21-ந்தேதி அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர் பின்னர், கைகள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி கல்லணை சாலையோரமாக பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து திருச்சி போலீசாரும், பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் புலன் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ராமஜெயத்தின் மனைவி லதா ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் சி.பி.ஐ. போலீசார் மேற்கொண்ட விசாரணையிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து இந்த கொலை வழக்கை தமிழக போலீசாரிடமே மீண்டும் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி வி. பாரதிதாசன் விசாரித்தார். அப்போது தமிழக போலீஸ் விசாரணைக்கு மீண்டும் மாற்ற முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கலாம். அதில் தமிழக அதிகாரிகளையும் இடம்பெறச் செய்யலாம் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ கருத்து தெரிவித்தார். இதற்கு தமிழக அரசு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தமிழக போலீஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வழங்க அரசு தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டார். இதன்படி தமிழக அரசு பெயர்ப்பட்டியல் வழங்கியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார். அதில், கூறியிருப்பதாவது:-

கடந்த 10 ஆண்டுகள் ஆகியும் ராமஜெயம் ஏன் கொலை செய்யப்பட்டார்? கொலைக்கான நோக்கம் என்ன என்பதை கூட போலீஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கிறேன்.

அதில், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள், தமிழக போலீசார் இடம்பெற வேண்டும். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. போலீஸ் அதிகாரி ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கிறேன்.

இந்த குழுவின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. டிஜிபி ‌ஷகில் அக்தர் மேற்பார்வை செய்ய வேண்டும். இந்த குழுவின் ஒட்டுமொத்த புலன் விசாரணையையும் இந்த ஐகோர்ட்டு கண்காணிக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை விசாரணையின் விவரங்களை அறிக்கையாக இந்த சிறப்பு குழு தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த சிறப்பு புலனாய்வு குழு வருகிற 21-ந்தேதி முதல் தங்களது விசாரணையைத் தொடங்கினால் நல்லது இந்த வழக்கு விசாரணையை மார்ச் 7-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.