உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது : 623 வேட்பாளர்கள் களத்தில்!

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக இன்று 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கு பாஜ தீவிர முயற்சி செய்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் இக்கட்சியே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த முறை இம்மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற பாஜ, இந்த முறை 234 இடங்களை மட்டுமே பிடிக்கும் என பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதே நேரம், இந்த முறை மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வேகத்தில் சமாஜ்வாடி கட்சி இருக்கிறது. இதன் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மேற்க வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் பிரசாரம் செய்து வருகிறார்.மற்றொரு புறம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும்,  பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். முக்கிய கட்சிகள் அனைத்தும் பெரியளவில் கூட்டணி அமைக்காமல் தனித்து களம் காண்பதால், பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  இம்மாநிலத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள  ஷாம்லி, ஹப்பூர், கவுதம் புத்தா நகர், முசாபர்நகர், மீரட், பக்பத், காசியாபாத், புலந்த்சர், அலிகார், மதுரா மற்றும் ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இதற்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.  இந்த தொகுதிகளில்  பாஜ, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.* இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.*  58 தொகுதிகளில் மொத்தம் 623 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  * 2.27 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.* கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்தப்படுகிறது.* தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் அசம்பாவிதங்கள் இன்றி நடத்தப்படுவதற்காக ஆயிரக்கணக்கான போலீசார், துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.* இதில் பதிவாகும் வாக்குகள், அடுத்த மாதம் 10ம் தேதி எண்ணப்பட உள்ளது.கடந்த முறை 53* இன்று தேர்தலை சந்திக்கும் 58 தொகுதிகளில், கடந்த 2017ல் நடந்த தேர்தலில் பாஜ 53 தொகுதிகளை பிடித்தது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 2 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.