கடன்களை திரும்பிச் செலுத்த முடியாது திணறுகிறதா இலங்கை? உண்மை நிலவரம் என்ன?இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், 

இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இருப்பதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.

அவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் எவ்வித அடிப்படைகளும் அற்றவை. அதேவேளை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அனைத்துத் தரவுகளும் மத்திய வங்கியினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையிலும் மேற்குறிப்பிட்ட ஊடக செய்திகளில் உண்மைக்குப் புறம்பான தவறான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலையடைகின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடன் மீளச்செலுத்துகை தொடர்பான கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதில் அரசாங்கமும், மத்திய வங்கியும் உறுதியாக இருக்கின்றது என்பதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்த சர்வதேச பிணைமுறிகளுக்குரிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை மீளச்செலுத்துவது சாத்தியமற்றது என்று சிலதரப்பினரால் கூறப்பட்ட போதிலும், நாம் அக்கொடுப்பனவை வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கின்றோம்.

சர்வதேச பிணைமுறிகளுக்காக கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச்செலுத்த வேண்டியிருந்த நிலையில், தற்போது அந்த தொகை வீழ்ச்சியடைந்திருப்பதுடன் எதிர்வரும் ஜுலை மாதமளவில் அது மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனை அடைந்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக இருதரப்பு மற்றும் பல்தரப்பு நிதியுதவிகள் மூலம் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை உறுதி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.