பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் – அண்ணாமலை

பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தார்.

பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணமலை கூறியதாவது: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு யாருக்கெல்லாம் வாழ்வு கிடைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், தமிழககத்தில் இருக்கிற ரவுடிகளுக்கு முக்கியமாக வாழ்வு கிடைத்திருக்கிறது. தூங்கிக்கொண்டிருந்த ரவுடிகள் இப்போது முதலமைச்சரின் உற்சாகமான உரையைக் கேட்டு களத்துக்கு வந்திருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாமல், குண்டாஸ் சட்டத்தில் சிறை சென்றவர், நீட் தேர்வு சம்பந்தமாக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார் என்ற நிலைப்பாட்டை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பெட்ரோல் குண்டு வீச்சுக்கு நீட் காரணம் என்று காவல்துறை கூறுவதை ஏற்க முடியாது. இந்த தாக்குதல் சம்பவத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

இதையெல்லாம் தாண்டி பாஜக தொண்டர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கிறது. கட்சி வளர்ந்திருக்கிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தொண்டர்கள் உற்சாகமாக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதை ஆளும் திமுகவால் பொருத்துக்கொள்ள முடியவில்லை.

பாஜக அலுவலகத்தில் இன்று காலை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. தமிழகத்தில் பல பகுதிகளில் இதே போல பல சம்வங்கள் நடந்திருக்கிறது. நாகப்பட்டினத்தில் பாஜகவின் இளைஞரணி மாவட்ட துணை தலைவர் புவனேஷ்வர் ராவ் கார் தீ வைத்து எரிக்கப்படிருக்கிறது. சென்னையில் திருவிக நகர் தொகுதியில், 77வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரேணுகாதேவியின் தேர்தல் பணி அலுவலகம் சூறையாடப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாநகராட்சியில், 44வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஓ.பி.சிவக்குமார் அவருடைய அலுவலகமும் சூறையாடப்பட்டிருக்கிறது. வேலூர் மாநகராட்சியில் 52வது வார்டு வேட்பாளர் கார்த்திகேயான் பணிமனை சூறையாடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, மிகத் தெளிவாக ஒரு போக்கும் சதியும் தெரிகிறது.

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தெரிந்ததும் தமிழ்நாடு காவல்துறை விரைந்து வந்து நடவடிக்கை எடுத்திருந்தாலும்கூட, இதில் இருக்கக்கூடிய சதி பின்னணியைக் குறித்து தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும்.

ஒரு அமைச்சர்கூட சொன்னார்கள். பாஜக போட்ட முடிச்சை பாஜகதான் அவிழ்க்க வேண்டும் என்று கூறினார். அதனால், இதற்கு பின்னால் இந்த முடிச்சை யார் போட்டார்களோ, அந்த முடிச்சை அவிழ்ப்பதற்கு, பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும். என்.ஐ.ஏ. இந்த வழக்கை முழுவதுமாக எடுத்துக்கொண்டு இந்த குற்றச் சதிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை முழுமையாக கண்டுபிடிக்க வேண்டும். என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

காவல்துறையினர், வந்து ஆதாரங்களை அப்புறப்படுத்தினார்கள். வழக்குப்பதிவு செய்யவில்லை. தடயங்களை எடுக்கவில்லை. எதுவும் நடக்கவில்லை. காவல்துறையினர் இங்கே வந்து, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமான ஆதாரங்களை தண்ணீர் ஊற்றி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அது எனக்கு புரியவே இல்லை.

அதனால், பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு விசிய சம்பவத்தை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு பின்னால் இருக்கக்கூடிய தேச விரோத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
இது போன்ற தாக்குதல் சம்பங்கள் எந்தவிதத்திலும் எங்களுடைய உறுதியைக் குலைகாது. ஒவ்வொரு நாளும் பாஜக வளர்ந்துகொண்டிருக்கிறது. பாஜக மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் முழு விச்சில் நடந்துகொண்டிருக்கிறது. இதனை, ஆளும் கட்சி தன்னுடைய பண பலம், படை பலத்தை வைத்து யாரை வைத்து எங்களுடைய வேட்பாளர்களை மிரட்டினாலும்கூட தேர்தல் பணிமனையை சூறையாடியானலும்கூட பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.

ஆளும் கட்சி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகிறது. தமிழகத்தில் முன்பு இருந்த சட்டம் ஒழுங்கு அதே போல இருக்கிறது என்று யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வன்முறைகள் அதிகரிப்பு, கொலைகள் அதிகரிப்பு, பழிக்குப்பழி கொலை அதிகரிப்பு, ஆணவப் படுகொலை அதிகரிப்பில் அதைப் பார்க்கிறோம். அதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு, பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பத்தைப் பார்க்கிறோம். இந்த சமபவம் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்துவதுதான் ஒரேஒரு தீர்வு. தமிழக அரசு இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு கொடுக்க வேண்டும். இது போன்ற வழக்குகளை என்.ஐ.ஏ.தான் சரியாக விசாரிக்கும்.” என்று கூறினார்.

சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக வினோத் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு விச்சு சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.