லக்கிம்பூர் வன்முறை: மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன்!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்
ஆஷிஷ் மிஸ்ரா
, விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறியதில் விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
லக்கிம்பூர் கேரி வன்முறை
சம்பவத்தில், 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விவசாயிகள் மீது, மத்திய இணை அமைச்சர் மகனின் கார் ஏறி கொல்லப்பட்டதற்கான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் இதுவரை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவர் உள்பட வழக்குக் தொடர்புடையவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறப்பு புலனாய்வு குழு
விசாரணையில் இது விபத்து அல்ல, நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் கீழ் நடந்த கொலை என தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உத்தரப்பிரதேச மாநில கீழமை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தாக்கல் செய்துள்ளனர்.

அதேசமயம், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரை உச்ச நீதிமன்றம் நியமித்தது. மேலும் 3 மூத்த போலீஸ் அதிகாரிகளையும் சிறப்பு புலனாய்வு குழுவுடன் சேர்த்தது.

இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன் மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.