ஹஜ் பயணிகளுக்கு உதவும் தன்னார்வலாராகச் செல்ல பிப். 23-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: ஹஜ் பயணிகளுக்கு உதவ தன்னார்வத் தொண்டர்களாக உடன் செல்ல விருப்புவர்கள் பிப். 23-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மற்றும் இதர மாநில ஹஜ் குழுக்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா செல்லும் புனிதப் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஹஜ் தன்னார்வத் தொண்டர்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கமாகும். இந்த ஆண்டு (ஹஜ் 2022) மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு, ஹஜ் தன்னார்வத் தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை (சுற்றறிக்கை எண்.9) “www.hajcommittee.gov.in” என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது.

ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தெரிவு செய்வதற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்.9-ல் தெரிந்து கொள்ளலாம். ஹஜ் தன்னார்வ தொண்டராக செல்ல விரும்பும் தகுதியுள்ள நிரந்தர அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவன ஊழியர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் (online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களின் துறை தலைவர் மூலம் உரிய வழியில் அனைத்து ஆவண நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு 23.02.2022-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்: செயலர் மற்றும் செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ரோஸி டவர், மூன்றாம் தளம், எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை) சென்னை-34.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.