ஹிஜாப் உடை பிரச்சனை: வலுவான கண்டன இயக்கம் நடத்திட கட்சி அணிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறைகூவல்.!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் சில கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் `ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக, பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் வெறியூட்டும் பேச்சுகளையும், வன்முறையையும் ஏவி விட்டு கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மிக நீண்டகாலமாக `ஹிஜாப்’ அணிந்து கல்வி நிலையங்களுக்கு வருவது நடைமுறையில் உள்ளது. அவரவர் விரும்புகிற மதத்தை பின்பற்றுவது அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். 

இதற்கு மாறாக கர் வாப்சி, லவ் ஜிஹாத், மாட்டுக்கறி தடை, பொது இடங்களில் வழிபாட்டுத் தடை போன்றவை உள்ளிட்ட  இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கைகளின் நீட்சியாகவே, காவியை முன்னிறுத்தும் `ஹிஜாப்’  எதிர்ப்பையும் பார்க்க வேண்டியுள்ளது. சமத்துவம், சீருடை உள்ளிட்ட விஷயங்களுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மதவெறி அரசியல் மற்றும் சித்தாந்தத்தின் நீட்சியே இது என்பது தெளிவு.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக திட்டமிட்டு மதவெறி அரசியலை உசுப்பிவிட்டு மக்கள் மத்தியில் மத மோதலை தீவிரப்படுத்தி வருகிறது. கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் நிறைவேற்றியது, அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயில்கள் அனைத்தையும் இந்து அமைப்புகளிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது இந்நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும். 

பாஜக அரசின் மதவெறி அரசியலின் பகுதியாகவே ஹிஜாப் தடை என்கிற பெயரில் தற்போது மாணவர்களிடத்தில் மதவெறியை கிளறிவிட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகத் தேர்தல்களில் தோல்வி முகத்தை தழுவியுள்ள பாஜக மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்த எத்தனித்துள்ளது.

இன்னொரு பக்கம், ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் 100 நாள் வேலை, கிராமப்புற மேம்பாடு, சத்துணவு திட்டம், மருத்துவம், வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, உர மானியம், உணவு மானியம், எரிபொருள் மானியம் என்று ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான ஒதுக்கீடுகள் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளதையும், விலைவாசியை கட்டுப்படுத்தவோ, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கோ எவ்வித நடவடிக்கையும் பட்ஜெட்டில் அறிவிக்காத நிலையில் அதனால் ஏற்படும் கோபத்தை மடைமாற்றம் செய்யவும், சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் நோக்கத்துடனேயே மதவெறி பிரச்சாரத்தில்  ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக ஈடுபட்டுள்ளது. 

ஐந்தில் நான்கு வீடுகளில் வருமானம் குறைந்து புதிதாக 23 கோடி பேர் ஏழ்மைக்கு தள்ளப்பட்டு 20 கோடி பேர் வேலையிழந்துள்ள ஒரு நாட்டில் அந்த பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்கு மாறாக மக்களை மதஅடிப்படையில் மோதவிட்டு ரத்தம் குடிக்கும் வேட்கையுடன் உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதியே ஹிஜாப் தடை நடவடிக்கையாகும்.

எனவே, சமத்துவம், சீருடை, பெண்ணடிமைத்தனம் என்று பாஜகவின் பசப்புகளுக்கு மக்கள் இரையாகிவிடாமல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மதச்சார்பின்மை, வேற்றுமையை அங்கீகரிக்கும் ஒற்றுமை ஆகியவைகளை சீர்குலைக்கும் பாஜகவின் நாசகர நோக்கத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து அமைப்புகளும் கண்டன இயக்கங்களை நடத்த வேண்டுமெனவும், இவ்வியக்கத்தில் மதச்சார்பற்ற சக்திகளையும், இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு விரிவாகவும், வலுவாகவும் முன்னெடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.