ஹிஜாப் பிரச்சினை: காவி சங்கிகளும் பச்சை சங்கிகளும்

“விடுதலை என்பது தலையை மூடியிருக்கும் துணியிலிருந்து அல்ல, மூளையைச் சுற்றியிருக்கும் குருட்டுச் சிலந்தி வலைகளிலிருந்து வெளியேறுவதுதான்” என்று ஒரு சகோதரி முகநூலில் எழுதியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ‘ஹிஜாப் ஆர்மி’ தற்கொலைப் படை ரேஞ்சுக்கு களமிறங்கி செயல்படும் என்பது எதிர்பார்த்ததுதான். இது ஹிஜாபிற்கு ஆதரவாக நிற்க வேண்டிய தருணமே, சந்தேகமில்லாமல்! ஏனெனில் இங்கே ஹிஜாபிற்கு எதிராக கிளர்ச்சி செய்வோர் இஸ்லாம் விரோத சக்திகள். அதேநேரம் ஹிஜாப் ஆர்மியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமும் இதுவே. இந்த சந்தர்ப்பத்தில்தான் பெண்களின் சுய சிந்தனை வெளிப்பாட்டுத் திறனில், இளம் சந்ததிகளின் மண்டையில் சம்மட்டி கொண்டு அடிப்பார்கள். உண்மையில் ஹிஜாப் அணிவதோ அணியாமல் இருப்பதோ நீங்கள் ஒரு வெல் செட்டில்ட் நிலையை எட்டிய பிறகு, ஒரு பாதுகாப்பான பொருளாதார ரீதியாக சௌகரியமான வாழ்வில் இருக்கும்போது ஒரு பிரச்சினையோ சவாலோ இல்லை. நிச்சயமாக இல்லை. நீங்கள் அவ்வாறு நடிப்பதற்கான முழு சுதந்திரத்துடன் இருப்பது வேறு, அன்றாட வாழ்வில் சமூக பாதுகாப்பு இல்லாத சூழலில் இனவெறுப்பாளர்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கவும் முடியாமல், வேறு தெரிவும் இல்லாமல் தினம் தினம் மத அடையாளத்தை கட்டிக் காப்பாற்றிக்கொண்டு வாழும் எளிய சாதாரண பெண்களின் நிலை வேறு.

இந்தச் சிக்கலான பின்னணியில் விடுதலை – மூளை வியாக்கியானங்கள் வெறும் தாளிப்புகள். நல்ல வாசனை மட்டும்தான். பசி தீராது. மூளையைச் சுற்றியிருக்கும் குருட்டுச் சிலந்தி வலைகளிலிருந்து நீங்கள் வெளியேறினால் தலையை மூட ஒரு துணி அவசியமே இல்லை என்ற தெளிவை எட்டுவதற்குத் தூரமாகாது. ஆனால் உங்களால் இது ஒருபோதும் முடியாது, நீங்கள் முயலவும் போவதில்லை. ஏன் கற்பனை செய்யப் போவதுமில்லை.

இங்கே துணி தலையை மட்டும் மூடவில்லை, மூளைக்குமே மூடியாயிருக்கிறது. நீங்கள் எவ்வளவு உயரத்தில் ஏறி நின்று கூவினாலும் இதுவே யதார்த்தம்.

கோப்புப்படம்

ஹிஜாப் என்பதே ஒரு குருட்டுச் சிலந்தி வலைதான் என்பதையும் புரிந்துகொண்டு, இஸ்லாமிய வெறுப்பாகத் தலை தூக்கியிருக்கும் நிகழ்ச்சி நிரலை உணர்ந்து அழுத்தமாக ஹிஜாபுக்கு ஆதரவு தெரிவிப்பதில் வெளிப்படும் அற உணர்வு, இந்த சந்தர்ப்பத்தில் ஹிஜாப் பிரச்சாரம் செய்வதில் வெளிப்படுவதற்கில்லை.

கலாசாரக் காவலர்களின் பிரச்சாரம்

இத்தருணத்தில் கலாசாரக் காவலர்களாக களமிறங்கி ஹிஜாப் பிரச்சாரம் செய்து, மேலும் மேலும் பெண்களின் தோள்களில் கலாசார அடையாளத்தைச் சுமத்தும் அரசியலையே முன்னெடுக்கும் ‘
பச்சை சங்கிகள்
‘ வினோதமான வார்த்தைகளில் முன்வைக்கும் பிரகடனங்கள் அழுகின்ற குழந்தைக்கு கிளுகிளுப்பையைக் குலுக்கி சிரிக்க வைக்க முயல்வது போல் ஆண்களை, மத பீடங்களைச் சொறிந்து கொடுக்கும் செயல்பாடே தவிர, இந்தப் பிரகடனங்களால் இன முரண்பாடுகள் தீராது.

இந்த விடயத்தில் முஸ்லிம்களாக இருப்போரின் பொறுப்பு, முஸ்லிம் அல்லாதோரின் பொறுப்பு அல்லது அறவுணர்வு ஆகிய இரு நிலைகளின் தொழிற்பாடு உள்ளது. ஆனால் இரண்டும் ஒன்று இல்லை என்பதாக கருதுகிறேன். முஸ்லிம் அல்லாதவர்களின் ஹிஜாப் ஆதரவு நிலைப்பாடு அவர்களது குரல்களின் அழுத்தம் என்பவற்றை இஸ்லாமிய கலாசார காவலர்களின் ஹிஜாப் பிரச்சாரம் அடித்துச் செல்வதே இங்கு நடக்கிறது. சிந்தியுங்கள், இது உண்மையில் வெறுமனே ஹிஜாப் பிரச்சாரத்திற்கான ஒரு சந்தர்ப்பம் மட்டும்தானா? நாம் பேசவேண்டிய பொருள் என்ன?

போராடும் இந்து மாணவர்களுக்குப் பின் நிற்பது யார்?

கர்நாடக மாநிலத்தில் நடந்துவரும் ஹிஜாப் பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆனால் காவித் துண்டைக் கழுத்தில் அணிந்த மாணவர்களும் கறுப்பு அபாயா அணிந்த மாணவர்களும் கட்டுப்படுத்த முடியாதபடி தொடர்ந்து போராடுகிறார்கள் எனில், இது மாணவர்களின் முடிவு அல்ல. அவர்களின் இதயங்களில் விஷம் கலக்கப்பட்டுள்ளது. இவர்களை இயக்கும் அரசியல் சக்திகள், மதவாத சக்திகளிடமிருந்து மாணவ சமுதாயத்தைப் பாதுகாப்பது மிக முக்கியமானது.

கர்நாடகம் முழுவதும் பரவியிருக்கும் இந்த விஷம் விரைவில் நாடு முழுவதும் பரவும் அபாயம் நிகழ்ந்துவிடாதபடி சமூக பொறுப்போடு கையாளப்பட வேண்டிய விடயம். நல்லிணக்கத்தின் கூறுகளை இனங்களுக்கு இடையிலும், இனத்திற்கு உள்ளேயும் சிதையாமல் காப்பதற்குச் சிறந்த வழி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை மத நீக்கம் செய்வதே. மதசார்பற்ற நாடு என்று அறிவித்துக்கொள்ளும் இந்தியாவில் நீதிமன்றம் இதுபோன்ற ஒரு தீர்வை அறிவித்து எதிர்கால சமுதாயத்தை காப்பாற்றினால் நன்று.

கோப்புப்படம்

மதத்தை மதம் கொண்டு வெல்ல நிகழும் போராட்டங்கள் மனித சமுதாயத்தின் ஆகக் குறைந்த இயல்புகளைக் கூட அழித்துவிடும். அவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கூவும் போது நாம் அல்லாஹு அக்பர் என்று கூவினால் தீர்ந்துவிடும் சிக்கல் இல்லை இது.

நீங்கள் அபாயா அணிந்த பெண்ணின் படத்தை ப்ரொபைல் படமாக வைத்துக்கொண்டால் காவிகள் காவி உடையில் போராடும் ஒருவரின் படத்தை வைத்துக்கொள்வார்கள். என்ன வித்தியாசம்? இரண்டும் மதம்தான்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பது என்பது அவர்களுடன் நின்று காயப்படுவதில்லை. அதிலிருந்து காப்பாற்றுவது.

முஸ்கானின் துணிச்சல்

காவி பயங்கரவாதிகளைப் பார்த்து கொஞ்சமும் பயப்படாமல் ரௌத்திரமாக நடந்து ‘அல்லாஹூ அக்பர்’ என அச்சமற்று கோஷமெழுப்பிய பீபி முஸ்கானை ஆறத்தழுவ ஆசையாய் இருக்கிறது. அவள் துணிவு தான் அவள். அவள் குரல், அவள் உடல் மொழி முழுவதும் அடக்குமுறைக்கு எதிராக திமிறிக் கொண்டு நிற்பதைப் பார்க்கப் பார்க்க பிடிக்கிறது. அவளது நேர்காணலில், அவ்வளவு தெளிவாகப் பேசுகிறாள். அதேநேரம் அவளிடம் வெறுப்புணர்வு சிறுதும் இல்லை. “இது என் வாழ்வின் ஒரு பகுதி” என்று அந்தத் துணியைத் தொட்டுச் சொல்கிறாள்.

பீபி முஸ்கான்

அந்த துண்டுத் துணி இல்லாமல் அவள் வீட்டை விட்டுக் கிளம்ப முடியாது. அந்த துண்டுத் துணி இல்லாமல் அவள் பள்ளிக்கு, கல்லூரிக்குச் செல்ல முடியாது. அவள் போராடுவது உண்மையில் அந்த துண்டுத் துணிக்காக இல்லை. அந்த துண்டுத் துணியை அணிந்துகொண்டுதான் அவள் வெற்றியடைய முடியும். அவள் தனக்காகப் போராடுகிறாள். தனது இலக்கை அடையப் போராடுகிறாள்.

அவள் காவி சங்கிகளை மட்டுமல்ல தன்னை இந்த நிலையில் கொணர்ந்து நிறுத்திய பச்சை சங்கிகளின் கண்களிலும் தான் குத்துகிறாள்.

‘பச்சை சங்கி’களின் போக்கு

//வற்புறுத்தலுக்கு அணிந்து இருந்தால்,
நேற்றே கழற்ற வழி தேடி இருப்பாள்,
கம்பீரமாய் கர்சித்து இருக்க மாட்டாள்//

இப்படி சந்தடி சாக்கில் சொல்லிப்போகும் இஸ்லாமிஸ்டுகளே, “அல்லாஹு அக்பர்” மீது சத்தியமாக சொல்லுங்கள், அவள் அவ்வாறு செய்திருந்தால் அவளை நீங்கள் என்ன சொல்லி இருப்பீர்கள்? அவளை அவள் வீடே வெறுத்திருக்கும். அவள் எங்கு போவாள்?

எங்கு போவது, என்ன செய்வது என்ற கேள்விகளுக்கு பதில் தேடக்கூட அனுமதியாமல் நீங்கள் அவளது ஏழு வயதிலேயே அவள் தலையில் ஒரு கொசுவலையை மாட்டிவிட்டுக் கோழி அடைகாப்பதுபோல் வளப்பீர்கள். அதைச் சிந்திக்கவோ, சுவாசிக்கவோ அறியாமல் வளர்க்கப்பட்ட அவளிடம் கழற்றவில்லை, அதுவே அவள் கம்பீரம் என்று வீறாப்பு பேச அசிங்கமாகவே இல்லையா?

அவள் சீற்றம் உங்களுக்கானதும்தான். அவள் கழற்றாமல் இருப்பதுவே உங்கள் மீது அவள் வீசும் கல். அதைக் கழற்றினால் நீங்கள் அவள் மீது கல்லை வீசுவீர்கள் என்பதை அவள் அறிந்தே இருக்கிறாள்.

“ஒரு துணிக்காக அவர்கள் எம் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்”
முஸ்கான்
சொல்லும் இந்தக் கூற்றில் ‘அவர்கள்’ யார் என்பதை நாமே தீர்மானிக்கும்படி அவள் விட்டது தற்செயல். ஆனால், அந்த ‘அவர்கள்’ காவி சங்கிகள் மட்டுமேயல்ல. பச்சை சங்கிகளும் என்பதையும் நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாம் மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை, ஹிஜாப் அணிவதற்கும் அணியாமல் இருப்பதற்கும் பெண்ணுக்கு உரிமையுண்டு என்று அங்கங்கு சொல்லிக்கொண்டிருந்த மிகச் சொற்பமான முஸ்லிம் லிபரல் குரல்கள்கூட இப்போது அடங்கிவிட்டன.

கோப்புப்படம்

இனி எந்தவொரு முஸ்லிம் பெண்ணுமே ஹிஜாப் இல்லாத தன் முகத்தைக் கற்பனைகூடச் செய்ய முடியாத ஒரு சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. முஸ்லிம் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், அபாயா மட்டுந்தான் அவள் உடை, ஹிஜாப் அவள் உரிமை, அடையாளம் என்று இன்னும் சட்டப் புத்தகத்தில் மட்டுந்தான் எழுதவில்லை. எல்லோரும் எழுதியாகிவிட்டது.

முஸ்கானுக்கும் அவள் ஹிஜாபிற்கும் ஆதரவாக முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள், மதசார்பற்ற மக்கள் தரும் நியாயமான ஆதரவுக்கும் அற எழுச்சிக்கும் அருகில் உங்கள் கோர முகங்களையும் வைக்காதீர்கள். நீங்கள் தகப்பன், சகோதரன், காதலன், கணவன், நண்பன், ஆசிரியர் போன்ற சங்கை காரணமாகவே முஸ்கான்களின் கைகள் உங்களுக்கு முன்னால் உயராமல் உள்ளது. ஈரான் பெண்கள்போல் இங்கும் முஸ்கான்கள் உங்களுக்கு எதிராகவும் கிளர்ந்தெழும் நாளையும் சந்திக்கவே போகிறோம். அப்போது நீங்கள் கூறும் ‘தெரிவு’ என்ற போலி சுதந்திர வாக்குமூலங்கள் பெண்களின் கால் செருப்புகளின் கீழிருக்கும்.

(கட்டுரையாளர் முகநூலில் எழுதிய கருத்துக்களின் தொகுப்பு இந்தக் கட்டுரை)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.