ஃபேஸ்புக் நியூஸ் மூலம் செய்தி நிறுவனங்களுக்குப் பணம்: ஃபேஸ்புக் திட்டம்

ஃபேஸ்புக் நியூஸ் வழியாக, செய்திகளைப் பிரசுரிக்கும் நிறுவனங்களுக்கு விரைவில் பணம் செலுத்தவுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் அமெரிக்காவில் அறிமுகமான ஃபேஸ்புக் நியூஸ், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அடுத்த ஒரு வருடத்துக்குள் அறிமுகமாகவுள்ளது.

இதுகுறித்துப் பேசியிருக்கும் ஃபேஸ்புக்கின் சர்வதேச செய்திப் பிரிவு துணைத் தலைவர் கேம்ப்பல் பிரவுன், “செய்தியின் முறைகளும், அதைப் படிக்கும் வாசகர்களின் பழக்கமும் ஒவ்வொரு தேசத்துக்கும் மாறும். எனவே ஒவ்வொரு தேசத்தின் செய்தி நிறுவனங்களுடனும் நாங்கள் இணைந்து பணியாற்றி, அந்தந்த நாட்டுக்கு ஏற்றாற்போல செய்தியின் வடிவங்களை மாற்றி, மக்களுக்கு மதிப்புமிக்க ஒரு அனுபவத்தைத் தருவோம். அதே நேரத்தில் செய்தி நிறுவனங்களின் வியாபார அமைப்பையும் மதிப்போம்.

எங்கள் நியூஸ் ஃபீடிலிருந்து கிடைக்கும் ட்ராஃபிக்கோடு சேர்த்து கூடுதலாக 95 சதவீத ட்ராஃபிக், ஃபேஸ்புக் நியூஸ் மூலம் செய்தி நிறுவனங்களுக்குக் கிடைக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அளவில் இன்னும் இதை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து நாங்கள் புதுப்புது சேவைகளைக் கட்டமைப்போம். சர்வதேச முதலீடுகளைக் கொண்டு செய்தித் துறை, நீடித்து நிற்கும் வியாபார அமைப்பைப் பேண உதவி செய்வோம்” என்று கூறியுள்ளார்.

அண்மையில், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சர்ச்சையானது. ஆனால், தங்களது விதிமுறைகளை மீறும் எந்தப் பதிவையும், இந்தியப் பிரபலங்கள் பகிர்ந்தால் அவை நீக்கப்பட்டுள்ளன, தொடர்ந்து நீக்கப்படும் என்று தெளிவுபடுத்தியிருந்தது.

“ஃபேஸ்புக் என்பது எப்போதுமே அனைவருக்கும் கிடைக்கும், வெளிப்படையான, பாகுபாடில்லாத, மக்கள் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் தளமாகவே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக, எங்கள் கொள்கைகளை நாங்கள் வலியுறுத்தும் முறையில் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபோன்ற பாரபட்சம் குறித்த குற்றச்சாட்டுகளை நாங்கள் மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். வெறுப்பு மற்றும் மதவெறி எந்த வடிவில் இருந்தாலும் அதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்” என்று ஃபேஸ்புக் இந்தியா பிரிவின் நிர்வாக இயக்குநர், துணைத் தலைவர் அஜித் மோகன் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.