அனுராதபுரம் சல்காதுவ மைதானத்தில் (09) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தின் முதலாவது கூட்டத்தின்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை

அனுராதபுரம் சல்காதுவ மைதானத்தில் (09) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தின் முதலாவது கூட்டத்தின்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை

இன்று அனுராதபுரத்தில் இருந்து புதிய பயணத்தை ஆரம்பிக்கின்றோம். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக ஞாபகம். போரில் வெற்றி பெற்ற பின்னர் 2010ஆம் ஆண்டு இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை அனுராதபுரத்தில் இருந்து ஆரம்பித்தோம். அதேபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களும் அனுராதபுரத்தில் இருந்து தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார். ஜனாதிபதி தேர்தலில் பிரமாண்டமான முறையில் வெற்றியீட்டிய அவர், அனுராதபுரம் ருவண்வெலி சாயவிற்கு வந்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

போரில் உயிர் தியாகம் செய்த நாட்டின் அனைத்து வீரர்களுக்காக அனுராதபுரத்தில் போர்வீரர் ஸ்தூபி கட்டப்பட்டது. நாம் வென்ற ஒவ்வொரு போரையும் அனுராதபுரத்தில் இருந்தே ஆரம்பித்தோம். இன்று நாம் அனுராதபுரத்தில் இருந்து அவ்வாறானதொரு பயணத்தை ஆரம்பிக்கின்றோம். இந்தத் தருணத்தில் இது இந்த நாட்டுக்கு இன்றியமையாத பயணம் என்றே சொல்ல வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உலகளாவிய கொவிட் தொற்றுநோயை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். அந்தக் காலம் முழுவதும் இந்த தொற்றுநோயிலிருந்து மக்களை காப்பாற்றுவதிலேயே எங்கள் கவனம் இருந்தது. இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் எதிர்க்கட்சி தலைவர் அதற்கு மருந்து பரிந்துரைத்தமையும் எனக்கு நினைவிருக்கிறது. உலக நாடுகளில் கெரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், முப்படையின் பங்களிப்புடன் மக்களின் உயிரை காப்பாற்ற முற்பட்ட போது முப்படையினரை அப்பணியில் ஈடுபடுத்துவதை தடுக்க எதிர்க்கட்சி பாரிய முயற்சி மேற்கொண்டது. இது முப்படையினர் செய்யக்கூடாத ஒன்று என்று கூட சர்வதேச சமூகத்திடம் கூறினர். உலகில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதனை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று கூச்சலிட்டனர். தடுப்பூசி கொண்டு வர முடியாது என அரசுக்கு சவால் விடுத்தனர். ஆனால் சீனாவில் இருந்து இலங்கைக்கு தடுப்பூசிகளின் முதல் தொகுதியை நாங்கள் கொண்டு வந்தோம். அப்போது சீன தடுப்பூசி தரம் குறைந்ததாகவும், தடுப்பூசி போடக் கூடாது என்றும் கூறப்பட்டது. உலகிலேயே சிறந்த தடுப்பூசி ஃபைசர் தடுப்பூசி, அதைப் பயன்படுத்துமாறும் கட்டாயப்படுத்தினர்.

இன்று மூன்றாவது தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசியை நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு வந்துள்ளோம். இன்று இவர்கள் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை.

இவர்களுக்கு இப்படி விளையாடுவதற்கு எவ்வாறு வாய்ப்பு கிடைத்தது. நாம் இத்தொற்று நோயுடன் முட்டி மோதி நோயிலிருந்து மக்களை பாதுகாத்த போதிலும் நாம் அமைதியாக இருந்தமையாலேயே இவர்கள் இவ்வாறு விளையாடுகின்றனர். ஆனால் நாம் அவ்வாறு அமைதியாக இருந்தால் நாட்டை அவர்கள் குழப்புகின்றமை எமக்கு புரிகின்றது.

இந்த நாட்டில் விவசாயிகளின் பிரச்சனை என்னவென்று உங்களுக்கு தெரியும். ஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்டை முப்பது நாற்பது வருடங்களாக ஆட்சி செய்து 2005 ஆம் ஆண்டு வரை ஒரு கிலோ நெல் 12 அல்லது 13 ரூபாவாகவே இருந்தது. சிறந்த விலையின்றி விவசாயிகள் விஷம் அருந்தினர். இப்போது கூச்சல் போடுபவர்கள் அப்போது விவசாயிகளை பார்க்க இருக்கவில்லை. 2005க்கு பிறகு ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபாய் கொடுத்தோம். 350 ரூபாய்க்கு உரம் வழங்கப்பட்டது. அந்த நாட்களில் 350 ரூபாவுக்கு உரம் கொடுக்க முற்பட்ட போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்ததா என்று சவால் விட்டிருந்தனர். நாங்கள் வந்து உரத்தை 350 ரூபாய்க்கு கொடுத்து, ஒரு கிலோ நெல்லை விவசாயியிடம் ரூ.25க்கு வாங்கினோம். இன்று உரத்துக்கு மானியம் வழங்கி கிலோ நெல்லை 55 ரூபாய்க்கு வாங்கினோம். வரலாற்றில் விவசாயிக்கு கிடைத்த சிறந்த நிவாரணம் இந்த அரசால் கிடைத்தது. ஆனால் இன்று என்ன நடந்துள்ளது. இன்று இந்த நாட்டில் விவசாயிகளின் மிக மோசமான எதிரியாக எமது அரசாங்கம் இருப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

இந்த நாட்டில் அதிகளவு நெல் காணப்படுவதாக 200,000 ஏக்கர் நெற்செய்கையை நல்லாட்சி அரசாங்கம் அன்றைய காலப்பகுதியில் நிறுத்தியதாக ஞாபகம். மத்தளவில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டது. நெல் இறக்குமதி செய்யலாம் என்று முடிவு செய்திருந்தனர். அப்படி செய்தவர்கள் விவசாயிகள் மத்தியில் சென்று, விவசாயிக்கு இவ்வளவு நிவாரணம் கொடுத்த விவசாயிக்கு எங்களை பரம எதிரியாக்கினார்கள். அது ஏன் நடந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் சுகாதார சட்டங்களை அரசு பாதுகாக்க வேண்டும். நோயாளிகள் தனிமைப்படுத்தல் மையங்களை அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இலட்சக்கணக்கான நோயாளிகள் பாதுகாக்கப்பட வேண்டும். தடுப்பூசி போட வேண்டும்.

அரசு அதை செய்யும் அதேவேளை எதிர்க்கட்சி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவும் அனுமதிக்க வேண்டும். பேரணிகள் மற்றும் போராட்டங்களையும் அனுமதிக்க வேண்டும்.

மேலும், நாட்டை மூட வேண்டும் என துரோகிகள் மிகுந்த ஆசை கொண்டிருந்தனர். மக்களை நினைத்து அரசாங்கம் நாட்டை மூடும் போது, ஆடைத் தொழிற்சாலைகளை திறப்பது நாட்டில் கொரோனா கொத்துக்களை உருவாக்கும் என எதிர்க்கட்சிகள் கூறின. ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டவுடன் தற்போது ஏற்றுமதி வீழ்ச்சியினாலும் பொருளாதார வீழ்ச்சியினாலும் நாட்டில் டொலர்கள் இல்லை என கூறுகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 5,000 ரூபாவினை பலமுறை வழங்கினோம். அனைத்து அரச ஊழியர்களுக்கும் 5000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. சம்பள உயர்வை வழங்கும்போது அரசாங்கம் தாய் தந்தையரின் சொத்தை விற்பனை செய்தா இவ்வாறு செய்கின்றது என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன.

இரண்டு வருட காலங்களாக இந்த நாட்டில் விவசாயிகளை கிளர்ந்தெழச் செய்தது, இந்த நாட்டில் ஆசிரியர்களை கிளர்ந்தெழச் செய்து வீதிக்குக் கொண்டு வந்தது, அரச ஊழியர்களை போராட்டக் களத்திற்கு இழுத்தவர்கள் யார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசு வந்ததிலிருந்தே, அரசாங்கம் ஆரம்பித்ததை எல்லாம் நிறுத்த சதி செய்கின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளையும் இதே முறையில் குழப்புவதுதான் திட்டம். அதை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். நினைவில் கொள்ளுங்கள், எங்களுக்கும் வீதி நன்கு தெரியும். எங்களுக்கும் விவசாய நிலங்கள் நன்கு தெரியும். நாங்களும் மணலில் நடப்போம். நாங்களும் நடைபயணம் செல்வது வழக்கம். நாங்களும் இப்போது வீதிக்கு வருகிறோம். நாமும் தொழிலாளர்கள் மத்திக்கு செல்வோம். விவசாயிகள் மத்திக்கு செல்வோம். மக்கள் மத்திக்கு செல்வோம். நாமும் அந்த சவாலை எதிர்கொள்வோம்.

அப்போது நல்லாட்சி அரசாங்கம் அனைத்து அரசியல் எதிரிகளையும் சிறைகளில் அடைத்து அரசியலை ஆரம்பித்தது. பொய்பான வழக்குகளை போட்டது. ஜனாதிபதியின் செயலாளரை சிறையில் அடைத்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஏராளமான அரசு ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பிக்கு துறவிகள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இராணுவ அதிகாரிகள் சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது. இராணுவத்தில் இருந்தவர்கள் அனைவரும் யுத்த குற்றவாளிகள் என சர்வதேச அரங்கிற்கு சென்று அவர்களுக்கு எதிரான தீர்மானங்களை அங்கீகரித்தார்கள். ஐ.தே.க., ஜே.வி.பி மற்றும் நல்லாட்சியின் தலைவர்கள் அலரிமாளிகைக்கு வந்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளை அழைத்து வந்து எதிர்க்கட்சியினரை சிறையில் அடைக்குமாறு கோரினர். இரவு நேரத்தில் நீதிபதிகள் மீதான அழுத்தமும், தொலைபேசி ஊடான அச்சுறுத்தல்களும் ரஞ்சனின் ஒலிப்பதிவுகளின் ஊடாக வெளிப்பட்டது.

ஒரு குடும்பத்தை அடக்க அரசியல் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்ட சபையில் தேரர்கள் இல்லை. தொழிலாளர்களும் இல்லை, தொழிற்சங்க தலைவர்களும் இல்லை. பொதுமக்களின் பிரதிநிதிகள் யாரும் இல்லை. பெரும்பாலான அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளே காணப்பட்டனர். அது மட்டுமன்றி, வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, என்னிடம் ராஜபக்ஷ வரி என்ற வரியும் விதிக்கப்பட்டது. அனைத்து தரப்பிலும் தீவிரவாதம் தலைவிரித்தாடியது. வாழ்க்கையில் யாருக்கும் நம்பிக்கை இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

தேசிய பாதுகாப்பு பூஜ்ஜியத்திற்கு சென்றது. வடக்கில் பிக்கு ஒருவரின் சடலத்தை தகனம் செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட நாட்டிற்கு இன்று நாம் சுதந்திரத்தை பெற்றுத்தந்துள்ளோம். இன்று அந்த சுதந்திரத்தை சதிகாரர்களின் கைக்கூலியாக எதிர்க்கட்சிகள் மாற்றியுள்ளனர். நாம் அதனை அனுமதிக்க மாட்டோம். நாமும் அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு வீதியில் இறங்கிக் கொண்டிருக்கிறோம். இன்று முதல் எதிர்க்கட்சி சக்திகளுக்கு நாம் சவால் விடுக்கிறோம், சதியால் அன்றி மக்கள் மத்திக்கு வந்து எங்களுடன் போராடி இந்த போரில் முடிந்தால் வெற்றி பெறுங்கள்.

தேர்தலில் தோற்போம் என்று முடிவு எடுத்தவர்கள் நாங்கள் அல்ல. அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் நாட்டைப் பற்றி எந்தத் தீர்மானமும் எடுக்காவிட்டால் நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் தற்போது இருந்திருக்காது. அப்போது நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் நிர்மாணிக்கப்படும் போது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதைப் பற்றி சிந்திக்காமல் நாட்டுக்காக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை கட்டியெழுப்பினோம். அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சம் இருந்திருந்தால் இந்த நாட்டிற்கு துறைமுக நகரம் இருந்திருக்காது. ஹம்பாந்தோட்டை துறைமுகமும் இந்த நாட்டிற்கு இல்லை.

அடுத்த தேர்தல் பற்றி சிந்தித்திருந்தால் விடுதலை புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் செய்ய நாம் தயாராக இருந்திருக்க மாட்டோம். நாம் அரசியல் முடிவுகளை எடுக்கும்போது அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதா அல்லது தோற்பதா என்று சிந்தித்து முடிவெடுப்பவர்கள் அல்ல. மேலும், இந்த அரசு இறக்குமதியை கட்டுப்படுத்த முடிவு செய்தது. அது எங்களுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்தோம். நாடெங்கிலும் சேதனப் பசளை விவசாயத்திற்கு மாற்றப்பட்டபோது, நாம் இதுபோன்ற சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.

அது மட்டுமின்றி எம்சிசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த போதும் இந்த சவால் எமக்கு வரும் என்பதை அறிந்தோம். ஆனால் நாட்டைப் பற்றி சிந்தித்து முடிவெடுக்கிறோம். அடுத்த தேர்தலை நினைத்து முடிவெடுக்கும் ஆட்கள் நாங்கள் அல்ல. நாட்டுக்கு முக்கியமானதாக இருந்தால் உரிய தருணத்தில் அந்த முடிவு எடுக்கப்படும். அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை இன்று முதல் உங்கள் முன் வர ஆரம்பிக்கின்றோம். சதிகளை கைவிட்டு மக்கள் மத்தியில் வந்து முடிந்தால் எங்களுடன் போராடி வெற்றி பெறுங்கள் என சவால் விடுகிறேன்.

பிரதமர் ஊடக பிரிவு

Geethanath Kassilingam
COORDINATING SECRETARY
THE PRIME MINISTERS OFFICE
Phone: +94112354818
Mobile: + 94777777314
Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Website: www.pmoffice.gov.lk

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.