இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை பாதுகாக்க குவாட் அமைப்பு உறுதி

மெல்பர்ன்:’இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை, மற்ற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்க வேண்டும்’ என, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும், ‘குவாட்’ அமைப்பின் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

ஆக்கப்பூர்வமான முடிவு

அங்கு, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற, குவாட் மாநாட்டில் பேசினார்.மாநாடு துவங்குவதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை, ஜெய்சங்கர் உட்பட மற்ற நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.
இதை தொடர்ந்து மெல்பர்னில் நடந்த, குவாட் மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாரைஸ் பெய்ன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ”வெளியுறவுத்துறை அமைச்சர்களின் நான்காவது, குவாட் மாநாடு சிறப்பாக முடிந்தது. பல்வேறு ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன,” என, அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தை மற்ற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாப்பது என, இந்த மாநாட்டில் உறுதி எடுக்கப்பட்டது.

தோல்வி

இந்த மாநாடு குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:சர்வதேச அளவில் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குவாட் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடுகளுக்கு இடையே மோதலை துாண்டுவிடுவது தான், இதன் நோக்கம். குவாட் அமைப்பின் இந்த நோக்கம் தோல்வி அடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.