இன்னும் நீதி கிடைக்கவில்லை: ஐ.நா.,வில் இந்தியா கவலை| Dinamalar

நியூயார்க் :’மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாத தாக்குதல்களில் பலியானோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ என, ஐ.நா.,வில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த கருத்தரங்கம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:

உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்கள் அச்சுறுத்தலாக உள்ளன. மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாத தாக்குதலில் பலியானோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த தாக்குதல்களை நடத்தியோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
ஆனால், அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்து, 20 ஆண்டுகள் கடந்த பின்னும், சில தலைவர்கள் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்வதை பார்க்கிறோம்.
பயங்கரவாதத்தை தடுக்க, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எட்டு அம்ச திட்டத்தை இந்த சபையில் வெளியிட்டுள்ளார். அதன்படி, பயங்கரவாதத்தை ஊக்குவிப்போரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்தை வரையறுப்பதில் இரட்டை நிலைப்பாடு கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.

பாரபட்சமற்ற அறிக்கை தேவை

ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி மேலும் பேசியதாவது:இந்தியாவின் அண்டை நாடு, ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்கிறது. இந்த அமைப்புடன் இணைந்து, அல் – குவைதா, தெற்காசியாவில் செயல்படும் ஐ.எஸ் – கே ஆகிய அமைப்புகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றன.
மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் – இ – தொய்பாவுக்கு, ஜெய்ஷ் – இ – முகமது அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதை பல முறை ஆதாரங்களுடன் இந்தியா எடுத்துரைத்தும் அது குறித்து, ஐ.நா., பொதுச் செயலர் வெளியிட்டுள்ள பயங்கரவாத தடுப்பு அறிக்கையில் இடம் பெறவில்லை. வருங்காலத்திலாவது உறுப்பு நாடுகள் அளிக்கும் விபரங்கள் பாரபட்சமின்றி ஐ.நா., அறிக்கையில் இடம் பெறும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.