கங்கனாவின் ட்வீட்டால் சர்ச்சை.. இவரது இயக்கத்தில் நடிக்க விரும்பிய நடிகை.. மேலும் சினிமா செய்திகள் உள்ளே

உதயநிதி படத்தின் டீசர் வெளியீடு

கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் அடுத்து இயக்கியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார்.

கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரி, ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், இளவரசன், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் தயாரான படம் ஆர்ட்டிகல் 15. இந்தப் படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி.

ஆர்ட்டிகல் 15 படத்தில் முன்னணி பாலிவுட் நடிகரா ஆயுஷ்மான் குரானா நடித்திருந்தார்.

நெஞ்சுக்கு நீதி படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

படத்தின் டீஸர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. டீஸரிலேயே கூர்மையான வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

எஃப்ஐஆர் படத்தை 3 நாடுகளில் வெளியிட தடை

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. 

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான மனு ஆனந்த் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், நடிகை ரைசா வில்சன், ரேபா மோனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். ‘கிருமி’ புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த திரைப்படம் இன்று (பிப்ரவரி 11) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 இந்த நிலையில் இந்த திரைப்படத்தை மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மலேசியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள ரசிகர்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

இவரை தான் திருமணம் செய்து கொண்டேன்: உறுதிப்படுத்திய அலியா பட்

நடிகை அலியா பட் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஹைவே, ராஸி, கலங்க், டியர் ஜிந்தகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆவார்.

பிரம்மஸ்த்ரா படத்தின் மற்றொரு முன்னணி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்தார்.

ரன்பீர் கபூர் சஞ்சு, தமாஷா, ராக்ஸ்டார், பர்ஃபி உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அலியா பட் அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.

அப்போது முதலே இருவரும் காதலிக்கின்றனர் என்று பாலிவுட் திரையுலகில் தகவல் வெளியானது. இதை இருவரும் மறுத்துவந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ரன்பீர் கபூர் செய்தியாளர்கள் சந்திப்பில், கொரோனா காலகட்டம் இல்லையென்றால் நாங்கள் திருமணம் செய்திருப்போம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே ரன்பீர் கபூருடன் எனக்கு மனதளவில் திருமணம் ஆகிவிட்டது என்று அலியா பட் தெரிவித்தார்.

அலியா பட், ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அத்துடன், பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கதியாவாடி படத்திலும் அவர் லீடிங் ரோலில் நடித்துள்ளார்.

ஹிஜாப் விவகாரம்: சர்ச்சையான  நடிகை கங்கனாவின் கருத்து

கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மணிகர்னிகா, குயின், கிரிஷ் 3 மற்றும் தமிழில் தலைவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவரான கங்கனா ரனாவத் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து சர்ச்சை ஆனது.

கங்கனா வெளியிட்ட பதிவில், ஆப்கானிஸ்தானில் ஹிஜாப் அணியாமல் உங்கள் வீரத்தை காண்பியுங்கள். கூண்டில் அடையாமல் சுதந்திரமாக இருங்கள் என்று பதிவு வெளியிட்டிருந்தார்.

இதற்கு மற்றொரு பாலிவுட் நடிகை ஷபானா ஆஷ்மி பதில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ஆப்கனில் நடப்பது ஜனநாயக ஆட்சி அல்ல. ஆனால், இங்கே நமது நாடு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு தானே ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க விரும்பும் பாலிவுட் நடிகை

பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் எடுத்து ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகத்தையே தனது பெயரை உச்சரிக்க செய்தவர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் கதாநாயகர்களாக வைத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில், இவரது இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அல்லு அர்ஜுன் ஆகியோரின் நடிப்பு பிடிக்கும். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தீபிகா படுகோன் நடித்த கெஹ்ரையான் படம் ஓடிடி தளமான அமேசானில் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. தீபிகா படுகோன் பிரபல பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங்கின் மனைவியாவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.