கர்நாடகாவில் வரும் திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறப்பு; முதல்-மந்திரி அறிவிப்பு

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. 
ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. 
இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் பரவியது. ஒரு சில இடங்களில் மோதல்களும் அரங்கேறியது. இதையடுத்து, கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டது.  
இதற்கிடையே, பள்ளி, கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கை 3 பேர் கொண்ட ஐகோர்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது.
இதனை தொடர்ந்து இந்த ஹிஜாப் வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், காஸி ஜெய்புனிஷா முகைதின் (பெண் நீதிபதி) முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 
மேலும், மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டு இந்த வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தது. மேலும், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த இடைக்கால உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
இந்நிலையில், நிலைமை தற்போது சீரடைந்துள்ளதையடுத்து கர்நாடகாவில் முதல் கட்டமாக வரும் திங்கள் கிழமை முதல் பள்ளிகளை திறக்க கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். திங்கள் கிழமை முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
2-ம் கட்டமாக நிலைமையை பொறுத்து விரைவில் 11 மற்றும் 12-ம் வகுப்பு திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கல்லூரிகள் திறப்பு குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். பள்ளிகளில் யாரும் மதம் சார்ந்த ஆடைகளை கட்டாயம் அணிந்து வரக்கூடாது என முதல்-மந்திரி பசரவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.