காதலுக்கு எல்லை இல்லை: காதலர் தினத்தில் கரம் பிடிக்கும் திருநங்கை – திருநம்பி ஜோடி

திருவனந்தபுரம்: திருநங்கை சியாமா பிரபாவுக்கும், திருநம்பி மனு கார்த்திகாவுக்கும் காதலர் தினத்தன்று வரும் 14-ம் தேதிதிருமணம் நடக்கிறது. காதலித்து கைப்பிடிக்கும் இந்த ஜோடி, திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய முயன்று வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட திருநம்பி மனுகார்த்திகா (31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக உள்ளார். இதுபோல் கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக இருப்பவர் சியாமா பிரபா (31). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதலர் தினமான வரும் 14-ம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ள இவர்கள், மூன்றாம் பாலினத்தவர்களின் திருமணப் பதிவிலும் புதியவரலாற்றை உருவாக்கும் முனைப்பில் உள்ளனர்.

இதுகுறித்து திருநம்பி மனு கார்த்திகா இந்து தமிழ் திசையிடம் கூறியதாவது: எங்கள் காதல் சினிமாவில் வருவது போல் கண்டதும் காதல் இல்லை.அதற்குள் ஒரு ஆத்மார்த்தமான ஈர்ப்பு உண்டு. சியாமா மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். அவருக்கு மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் தன்மையும் அதிகம். அதுதான் அவர் மீது எனக்குக் காதலைஏற்படுத்தியது. சியாமா வீட்டில் முத்தப் பெண். அவள் திருநங்கையாக மாறியிருந்தாலும் தன் குடும்பத்தைஅர்ப்பணிப்புடன் கவனித்துக் கொண்டாள். எந்தக் கடமையில் இருந்தும் சியாமா பின்வாங்கவில்லை.

நானும் எனது வீட்டில் மூத்தவன். சியாமாவின் குணநலன்களைப் பார்த்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே என் காதலைச் சொல்லிவிட்டேன். சியாமா ஓராண்டுக்கு முன்புதான் சம்மதித்தார்.

சியாமா இப்போது முனைவர் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.

வழக்கமாக திருமணத்தை பதிவுசெய்யும்போது ஆண், பெண் என்றஅடையாளத்துடன் பதிவு செய்வது வழக்கம். நாங்கள் எங்கள் திருமணத்தை இரு மூன்றாம் பாலினத்தவருக்கு இடையிலான திருமணம் எனபதிவு செய்ய உள்ளோம். அப்படி பதிவு செய்வதில் நாங்கள் வென்றுவிட்டால் இந்தியாவிலேயே முதன்முதலில் அப்படி பதிவு செய்யப்பட்ட திருமணம் இதுதான்.

திருநங்கைகள் உரிமை சட்டம் 2014 மற்றும் திருநங்கைகள் உரிமைபாதுகாப்புச் சட்டம் 2019 ஆகியவை இப்படிச் செய்வதற்கான உரிமையை வழங்குகிறது. இந்த அடையாளத்துடனேயே திருமணத்தை பதிவு செய்துவிட்டால் மூன்றாம்பாலினத்தவர்கள் தங்களை திருமணபந்தத்திலும் துணிச்சலுடன் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் சூழல் உருவாகும்.இவ்வாறு திருநம்பி மனு கார்த்திகா கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.