சிவகார்த்திகேயன் 10 ஆண்டுகள்: "ரஜினிக்கு டப்பிங் பண்ண வந்தார் சிவா!"- நினைவுகள் பகிரும் பொன்ராம்

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் அடியெடுத்து வைத்து பத்தாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. “எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் – இன்னும் கடினமாய் உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வைப் பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே… என் இதயத்தின் ஆழ்மனதிலிருந்து அன்பும் நன்றியும்…” என நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார்.

சிவாவின் பத்தாண்டு பயணம் குறித்து, இயக்குநர் பொன்ராமிடம் கேட்டோம். சிவாவின் கரியரில் அதிக படங்கள் இயக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம்.

இயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன்

“சினிமாவில் முதல்படியா சிவா சார் பத்து வருஷத்தைக் கடந்திருக்கார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவிக்கறதுல சந்தோஷமா இருக்கு. முதல் ஓவரிலேயே நல்ல ஸ்கோர் எடுத்து முன்னணியில நிக்கறது நல்ல விஷயம். அவரை முதன்முதலா சந்திச்சது எங்கேனு நல்லா ஞாபகம் இருக்கு. ஆனந்த விகடன், ராஜேஷ் இயக்கத்துல ‘எஸ்.எம்.எஸ்’ படத்தைத் தயாரிச்சது. அந்தப் படத்தோட டப்பிங் வேலைகள் அப்ப நானும் இருந்தேன். ரஜினி சாரோட வாய்ஸுக்கு டப் பண்றதுக்காக சிவா அங்கே வந்திருந்தார். அங்கேதான் அவர் எனக்கு அறிமுகமானார். அதன்பிறகு சின்னத்திரையில் ‘அது இது எது’ உள்பட அவரது டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பேன்.

அவரோட ஒர்க் பண்ணின முதல் படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. அதோட கதையை சொல்றதுக்காக சிவாகிட்ட நேரம் கேட்டேன். ‘காலையில ஏழு மணிக்கு நாம சந்திச்சிருவோமா?’னு கேட்டார். எனக்கு அவ்ளோ சந்தோஷம். ஏன்னா, காலையில ஏழு மணிக்கு கதை சொல்றதுக்குத்தான் எனக்கும் பிடிக்கும். அப்ப மைன்ட் ஃப்ரெஷ்ஷா எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருக்கும். சரியா ஏழு மணிக்கு அவர் வீட்டுக்கு போய், முழுப்படத்தையும் அவர்கிட்ட சொன்னனேன்.

சிவகார்த்திகேயன்

மூணு படங்கள்லேயும் மறக்கமுடியாத விஷயங்கள் நிறைய இருக்கு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படப்பிடிப்புல ஒருநாள் ஒரு சீன் எடுத்துட்டு இருந்தோம். ஶ்ரீதிவ்யா அவங்களுக்கு கல்யாணம்னு வீடு வீடுக்கு போய் பத்திரிகை கொடுத்துட்டு இருப்பாங்க. ஷூட்டிங்கை நிறைய பேர் வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க. அப்ப சிவா சார் சீன்ல ஒரு விஷயம் சேர்த்துக்கலாமானு கேட்டார். ‘நான் கோயில் சுவர்ல சோகமா உட்காந்துட்டு இருப்பேன். அப்ப ஒரு குழந்தை என்கிட்ட ஓடிவந்து ‘மாமா மாமா அக்கா கூப்பிட்டாங்க’னு சொல்லும். உடனே அந்த பொண்ணுகிட்ட உங்க அக்கா நல்லா இருக்குமானு கேட்பேன். இந்த டயலாக்கை சேர்த்துக்கலாமா’னு கேட்டார்.

இது ஸ்கிரிப்ட்ல இல்ல. அதனால, யூனிட்ல இருக்கறவங்க எல்லாருமே, ‘ஐயையோ இது சீரிஸான சீனு… இது வேணாம்’னு சொன்னாங்க. ஆனா, எனக்கு அந்த டயலாக் பிடிச்சிருந்தது. அந்த டயலாக்கை ஷூட் பண்ணும் போது சுத்தி வேடிக்கை பார்த்திட்டு இருந்த கூட்டம் முழுக்க சிரிச்சாங்க. அந்த ஆடியன்ஸுக்கு இந்த சீனுக்கு முன்னாடி என்ன கதை, பின்னாடி என்ன கதை நடந்திருக்குன்னு சுத்தமா தெரியாது. ஆனா, அங்கேயே அவ்வளவு சிரிச்சாங்க. அப்பவே இந்த சீன் கன்ஃபார்ம் ஹிட்னு நினைச்சேன். அதே மாதிரி அது தியேட்டர்ல வந்தப்ப, பலமடங்கு சிரிப்பு சத்தம் கேட்டதும், அவ்ளோ உற்சாகமானேன்” எனத் தன் நினைவுகளை பகிர்ந்தார் பொன்ராம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.