டெஸ்லாவை வரவேற்கிறோம்; ஆனால்…; வேண்டுகோள் விடுத்த மத்திய அமைச்சர் நிதி கட்கரி!

எலான் மஸ்க்கின்
டெஸ்லா
நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவமனமாக உள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அவரது நிறுவனத்தை இந்தியாவில் அமைக்க
எலான் மஸ்க்
முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் இந்திய பிரிவுக்கான பெயரை பதிவு செய்தது அவரது நிறுவனம். மேலும், டெஸ்லா தனது ஏழு கார்களுக்கு இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதலையும் பெற்றுள்ளது.

ஆனால், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் அதிகமாக இருப்பதாக எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்தார். டெஸ்லா நிறுவனம் கோரியுள்ள இறக்குமதி வரி குறைப்பு கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து, எலெக்ட்ரிக் கார்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்குமாறு எலான் மஸ்க் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு அந்நிறுவனம் கடிதமும் எழுதியுள்ளது.

இதனிடையே, டெஸ்லா இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து தெரிவித்த எலான் மஸ்க், இந்திய அரசுடன் இன்னும் நிறைய சவால்களை எதிர்கொள்கிறோம் என்று தெரிவித்தார். இதையடுத்து, தெலங்கானா, மேற்குவங்கம், தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சார்ந்த அமைச்சர்கள் தங்களது மாநிலத்தில் வந்து உற்பத்தி ஆலையை அமைக்குமாறு எலான் மஸ்க்குக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதி கட்கரி, டெஸ்லா நிறுவனத்தை வரவேற்பதாகவும், அதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

நாட்டின் மோட்டார் வாகனத்துறை மிகப் பெரியது. இத்துறையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.7.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. சர்வதேச கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்துள்ளன. எனவே டெஸ்லாவையும் வரவேற்கிறோம். அதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று
நிதின் கட்கரி
தெரிவித்துள்ளார்.

ஆனால், கார்களை சீனாவில் தயாரித்து அதை இந்தியாவில் விற்பனை செய்ய எலான் மஸ்க் விரும்புகிறார். அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். “இந்தியாவிலேயே எலான் மஸ்க் தனது சொந்த ஆலையை தொடங்கலாம் என்று அவரிடம் கேட்டுக் கொள்கிறோம். இங்கே அனைத்து வசதிகளும் உள்ளன; இங்கே தரமான உற்பத்தியை அவர் பெறலாம்; நல்ல விற்பனையைப் பெறலாம்; இந்தியாவில் உற்பத்தியை தொடங்கினால் வரவேற்கிறோம்; அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், சீனாவில் உற்பத்தி செய்வதும், இந்தியாவில் விற்பனை செய்வதும் ஜீரனிக்க கூடியதாக இல்லை.” என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அரசு வரி விதிப்பில் சலுகைகள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டையும் டெஸ்லா நிறுவனம் முன்வைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய மோட்டார் நிறுவனங்கள் அனைத்தும் இங்கு உள்ளன. ஒரு நிறுவனத்திற்கு மட்டும் சலுகைகள் அளிப்பது சாத்தியமில்லை என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.