நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட் தொடர் நிறைவு: காங்., திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதில், கடந்த 1ம் தேதி 2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, இரு அவையிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற்றது. இந்நிலையில், நேற்றுடன் பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இதில், புதிதாக எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படவில்லை. அடுத்ததாக, 2ம் கட்ட பட்ஜெட் தொடர் வரும் மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், உபி தேர்தல் பிரசாரத்தில் பேசிய இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘இந்த நேரத்தை தவறவிட்டால், உபி மாநிலம், காஷ்மீர், கேரளா அல்லது மேற்கு வங்கமாக மாறிவிடும்,’ என்று கூறினார். இந்த பிரச்னையை மக்களவையில் நேற்று காலை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பி.க்கள் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக விவாதிக்கக் கோரி, கேரள காங்கிரஸ் எம்பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘ஒரு முதல்வரின் இத்தகைய கருத்துக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது,’’ என்றார். ஆனால், கேள்வி நேரம் முடிந்ததும் இந்த விவகாரம் குறித்து பரிசீலிப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதை ஏற்காத, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாடி, கேரள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.