மதவெறியைத் தடுக்க கிராமங்களில் சமூகநீதிக் குழுக்கள் உருவாக்க வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை

விருத்தாசலம்: கிராமங்களில் மதவெறி தூண்டப்பட்டு வருவதால் அரசே சமூகநீதிக் குழுக்களை உருவாக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று கடலூர் வந்திருந்தபோத செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் முறையாக நீட் விலக்கு மசோதாவை தமிழக முதல்வர் நிறைவேற்றி வரலாறு நிகழ்வை ஏற்படுத்தி உள்ளார். ஒத்திசைவு பட்டியலில் உள்ள பொருள் தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றினால் என்னவாகும் என்ற விவாதம் தற்போது நடந்து வருகிறது. எனவே ஜனாதிபதிக்கு இந்த மசோதாவை உடனடியாக ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும். இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று நம்புகிறேன். நீட் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக இருந்தாலும் தற்போது அவர்களும் நீட் விலக்கு மசோதாவை ஆதரிப்பதால் அதுகுறித்து நாம் பேச வேண்டியது இல்லை. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கூட்டாட்சி முறையில் உறவு இருக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி கட்சி சார்பில் கூட்டாட்சி கோட்பாடும், நாடாளுமன்ற ஜனநாயகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்துகிறோம். புதுச்சேரியில் நடைபெறும் இந்த கருத்தரங்கு டெல்லி உள்பட மற்ற மாநிலங்களிலும் நடத்தப்படும். ஹிஜாப் விவகாரத்தில் பாஜக நாட்டை நாசமாக்க நினைக்கிறது. இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் ஆடை சுதந்திரம் உள்ளது. கர்நாடகாவை மையமாகக் கொண்ட குழு தமிழக கிராமங்களில் ஊடுருவி மதவெறியை தூண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். அரசே சமூக நீதி குழுவை உருவாக்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஏனெனில் அதிமுக கூட்டணி தேர்தலுக்கு முன்பே சிதறி விட்டது. திமுக கூட்டணி 10 கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணி என்பதால் உள்ளாட்சி அமைப்புகளில் அதற்கேற்ப இடம் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய விசிகவினரை அமைச்சர் அவமரியாதை செய்தார் என்று சனாதன சக்தி, சாதிய சக்திகள் அவதூறு பரப்பி வருகின்றனர். நாங்கள் அண்ணன், தம்பி உறவுடன் செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.