“மனதளவில் ரன்பீருடன் திருமணம் ஆகிவிட்டது” – ஆலியா பட்

தனக்கும், ரன்பீர் கபூருக்கும் ஏற்கெனவே மனதளவில் திருமணம் நடந்துவிட்டதாக பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகனான ரன்பீர் கபூர், பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட நடிகைகளுடன் காதலில் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல இயக்குநரான மகேஷ் பட்டின் மகளும், முன்னணி நடிகையுமான ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ‘பிரம்மாஸ்திரா’ படத்தின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக, கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும், இவர்கள் இருவரும் ஜோடியாக வந்தனர். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணைந்து வந்தநிலையில், ரன்பீர் கபூர் தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தார்.

image

கடந்த 2019-ம் ஆண்டே ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாவின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ரிஷி கபூர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், இவர்களது திருமணம் அப்போது தடைபெற்றது. இதையடுத்து 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கில் திருமணத்தை அவசர அவசரமாக நடத்தும் திட்டமில்லை என்று இருவரும் அறிவித்திருந்தனர்.

அடுத்தடுத்து பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகள் தங்களது திருமணத்தை முடித்து வரும் நிலையில், அடுத்ததாக ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் திருமணத்தை பாலிவுட் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், என்.டி.டிவி.யின் முன்னாள் பத்திரிகையாளரான ராஜீவ் மசந்திக்கு கொடுத்தப் பேட்டியில், “கொரோனா தொற்றுநோய் ஊரடங்கு மட்டும் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், ஆலியாவுக்கும், எனக்கும் இந்நேரம் திருமணம் முடிந்திருக்கும்” என்று ரன்பீர் கபூர் தெரிவித்திருந்தார்.

image

இந்தப் பேட்டி அப்போது வைரலானது. இந்நிலையில், ராஜீவ் மசந்தியிடம் ரன்பீர் கபூர் தெரிவித்தது குறித்து என்.டி.டிவி, தற்போது ஆலியாவிடம் கேள்வி கேட்டது. இதுக்கு பதிலளித்த ஆலியா, “ஆமாம். திருமண ஏற்பாடுகளை இந்த கொரோனா பரவல் பாழக்கிவிட்டது. எனினும், பல வருடங்களுக்கு முன்பே எனக்கும், ரன்பீருக்கும் மனதளவில் திருமணம் நடந்துவிட்டது. எல்லாமே ஒரு காரணத்திற்காகவே நடக்கும். நாங்கள் எப்போது திருமணம் செய்கிறோமோ, அது சரியாகவும் அழகாகவும் நடக்கும்”  என்று கூறியுள்ளார். ஆலியா பட் நடித்துள்ள ‘கங்குபாய் கத்தியவாடி’ வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.