13 அடி நீள மேசை.. தடுப்பூசி செலுத்த மறுத்த பிரான்ஸ் அதிபருக்கு கெடுபிடி காட்டிய ரஷ்யா 

மாஸ்கோ: உக்ரைன் விவகாரம் உச்சமடைந்துள்ள நிலையில் ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியாக சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடுமையான கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் பேச்சுவார்த்தை நடத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் இருவரும் மிக நீண்ட மேசைக்கு எதிரெதிரே அமர்ந்திருக்கின்றனர். அந்த மேசையின் நீளம் 13 அடி எனத் தெரிகிறது.

ரஷ்யா விதித்த கரோனா கெடுபிடிகளை பிரான்ஸ் அதிபர் ஏற்காததால் அவருக்கு இத்தகைய கெடுபிடிகள் காட்டப்பட்டதாகத் தெரிகிறது.

ரஷ்ய பயணத்திற்கு முன்னர் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதனை மேக்ரோன் நிராகரித்துவிட்டார். அதனாலேயே கரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 13 அடி நீள மேசையில் எதிரெதிரே அதிபர்கள் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பின்போது இருநாட்டுத் தலைவர்களும் கைகுலுக்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.

ரஷ்யா வந்தடைந்தவுடன் மேக்ரோனுக்கு ரஷ்ய மருத்துவர்கள் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் மறுப்பு தெரிவித்த பிரான்ஸ் அதிபர், பிரான்ஸில் இருந்து கிளம்புவதற்கு முன்னரே ஆடி பிசிஆர் மற்றும் ஆன்டிஜென் சோதனைகளை மேற்கொண்டு வந்தார்.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ரஷ்யா மேற்கொண்ட முயற்சி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஒரு நாட்டின் அதிபரை ரஷ்யா இத்தகைய செயல் மூலம் அவமதித்துள்ளதாகவும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்புகின்றன.

அதே வேளையில் ரஷ்ய அதிபரின் க்ரெம்ளின் மாளிகை வட்டாரமோ, அதிபர் புதினின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. அதனாலேயே இத்தகைய கெடுபிடியைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று என்று விளக்கம் கொடுத்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ரஷ்யா வந்து சென்ற சில நாட்களில் கசகஸ்தான் நாட்டு அதிபர் காசிம் ஜோமர்ட் டொகயேவ் ரஷ்யா வந்தார். அவரை புதின் கைகுலுக்கி வரவேற்றார். இருவருக்கும் இடையே ஒரு சிறிய காஃபி டேபிள் மட்டுமே இருந்தது.

இது பிரான்ஸ் அதிபருக்கு விதிக்கப்பட்ட கெடுபிடி சர்ச்சையை மேலும் வலுவடையச் செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.