IPL Auction 2022: அதிகம் அறிமுகமில்லாத, ஆனால் ஆக்ஷனில் அசத்தப்போகும் வெளிநாட்டு வீரர்கள் யார், யார்?

வாய்ப்புகளை வசப்படுத்துவதற்கான வழி என்பதையும் தாண்டி, இதயங்களை வசீகரிப்பதற்கான வாய்ப்பு என்பதாலும் ஐபிஎல் கிரிக்கெட்டர்களால் விரும்பப்படுகிறது.

முகமறியா இளம்வீரர்களது திறனை வெளிக்கொணர ஆரம்பிக்கப்பட்டதுதான் ஐபிஎல். ஆனால், தற்சமயம் சர்வதேச அணிக்காக ஆடிக் கொண்டிருக்கும் வேற்று நாட்டு வீரர்கள்கூட ஐபிஎல்லில் ஆடிவிட மாட்டோமா என ஆசைப்படுமளவு மாறியுள்ளது. இது பணத்தின் மீதான ஈர்ப்பு மட்டுமல்ல, புகழின் மீதான போதையும்கூட. இந்த டி20 போட்டிகளில் கிடைக்கும் கவனம், சமயத்தில் சர்வதேசப் போட்டிகளையே தாண்டி நிற்கிறது.

அந்த வகையில் வேற்று நாட்டைச் சேர்ந்த வீரர்களில் சர்வதேச அணிக்காக ஆடியிருந்தாலும் சரி, ஆடாவிட்டாலும் சரி, பெரிய அறிமுகமில்லாத, ஆனால் ஐபிஎல் ஏலத்தில் இடம்பிடிக்க இருக்கும் சில பெயர்களைப் பற்றியதுதான் இப்பதிவு.

ரொமேரியோ ஷெப்பர்ட்

ரொமேரியோ ஷெப்பர்ட்

ஐபிஎல்லுக்கும், கரிபியன் ஆல் ரவுண்டர்களுக்குமான காதல் எப்போதுமே அலாதியானது. கெய்ல் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் பிராவோ, ரசல், பொல்லார்ட் போன்ற வீரர்களுக்கும் மிச்சமிருப்பது சில சீசன்கள்தான் என்பதால் அடுத்த தலைமுறை வீரர்களுக்கான தேடல் தொடங்கி விட்டது. இந்தப் புள்ளியில்தான் ரொமேரியோ ஷெப்பர்டின் சமீபத்திய சிறந்த பெர்ஃபார்மன்ஸுகள் கூடுதல் கவனம் பெறுகின்றன. கடந்த மூன்று சீசன்களாக, தனது பெயரைப் பதிவு செய்து, ஏலத்தில் எடுக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருந்த அவருக்கு, 2020-ம் ஆண்டு பிராவோவுக்கு மாற்று வீரராகச் சேர்க்கப்பட்ட போதுகூட களமிறங்கும் வாய்ப்பு அமையவில்லை.

இந்த நிலையில், இங்கிலாந்துடனான சமீபத்திய டி20 போட்டியில், அவரது அதிரடி ரன்குவிப்பு, அவர்மீது பார்வையைப் படிய வைத்துள்ளது. 65/7 என தத்தளித்த அணியில் அக்கீலுடன் இணைந்து அற்புதமான ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்து, தன் பங்குக்கு 28 பந்துகளில் 44 ரன்களைக் குவித்திருந்தார்.

முன்னதாக எக்கானமியை எகிற வைத்தவர், பின் சிறந்த பௌலராக தன்னை நிருபித்து வந்திருக்கிறார். ஆனால், கடந்தாண்டு நடந்த கரிபியன் லீக்குக்குப் பின், டி20-ல் பேட்ஸ்மேனாகவும் 160-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டோடு மிரட்டுகிறார். பழைய கரிபியன் வீரர்களுக்கான பேக்கப்பாக கேகேஆர், மும்பை உள்ளிட்ட ஏதோ ஒரு அணி இவரை வாங்க முன்வரலாம்.

டொமினிக் டிரேக்ஸ்

முன்னாள் மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஆடியுள்ள வாஸ்பர்ட் டிரேக்ஸின் மகனான டொமினிக், வேகத்தில் பந்துக்கே பயங்காட்டும் முரட்டுக் குதிரையாக இருந்தாலும், கடந்தாண்டு கரிபியன் லீக் இறுதிப் போட்டியில் பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பினார். 24 பந்துகளில் வந்து சேர்ந்த 48 ரன்கள் அவரின் வலுவைக் காட்டியதோடு, அவரது அணியைச் சாம்பியனாக்கியது. ஐபிஎல்லில் கடந்த சீசனில் காயமடைந்த சாம் கரணுக்கான மாற்று வீரராக சிஎஸ்கேயுடன் இணைந்தாலும் இன்னமும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

டொமினிக் டிரேக்ஸ்

சர்வதேச கிரிக்கெட்டிலேயே ஆடிவிட்டாலும் இன்னமும் இவரது ஐபிஎல் மோகம் அப்படியேதான் உள்ளது. இவரது மிரட்டும் பந்து வீச்சுக்காகவும், பிஞ்ச் ஹிட்டிங் திறனுக்காகவும், லோயர் ஆர்டரில் அவர் காட்டும் வாண வேடிக்கைக்காகவும், இம்முறை இவருக்காக பணத்தை வாரி இறைக்க அணிகள் முன்வரலாம். “இந்த ஆண்டை விட முந்தைய ஆண்டு நன்றாக இருந்தது எனச் சொல்லும் வாசகம், எனக்குப் பிடிக்காது. தேக்கநிலை என்பதே, வாழ்வில் இருக்கக் கூடாது” என சமீபத்தில் டொமினிக் தெரிவித்திருந்தார். இந்த ஐபிஎல் அவருக்கு கடந்தாண்டை மிஞ்சுமளவு இருக்குமா? மிஞ்சுவதுதானே எஞ்சும்?!

ரோவ்மன் பவல்

ஐபிஎல்லில் ஆல் ரவுண்டர்களின் பஞ்சத்தைத் தீர்க்கக் காத்திருக்கும் இன்னொரு கரிபியன் ஆல் ரவுண்டர், ரோவ்மன் பவல். பொதுவாக எந்த ஒரு ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாகவும் ஒரு குறிப்பிட்ட வீரரின் சமீபத்திய செயல்பாடுகளும் அவரது தற்போதைய ஃபார்மும்தான் அவருக்கான விலையை நிர்ணயிக்கும் காரணிகளாகும். அந்த வகையில் 30+ சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடிவிட்டாலும், மிடில் ஆர்டரில் மிரட்டினாலும், குறிப்பாக டி20-ல் 133 ஸ்ட்ரைக் ரேட்டோடு அச்சுறுத்தினாலும், சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவர் அடித்த அதிவேகச் சதம்தான் ஐபிஎல் ஏலத்தில் அவருக்காகக் குரல் கொடுக்க உள்ளது.

ரோவ்மன் பவல்

வெறும் 51 பந்துகளில் வந்து சேர்ந்த அவரது முதல் டி20 சதம், 20 ரன்கள் வித்தியாசத்தில் அணியை வெல்ல வைத்ததோடு, ஐபிஎல்லில் ஏதோ ஒரு அணியில் அவருக்கான அட்வான்ஸ் புக்கிங்கைச் செய்து விட்டது. பௌலிங்கில் பெரிதாக ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும், டி20-க்குத் தவிர்க்க முடியாத தேவையான கூடுதல் பௌலர் அவதாரமெடுத்து ஒரிரு ஓவர்களை இவரால் வீச முடியும். 2017-ல் கேகேஆரால் வாங்கப்பட்டும் விளையாட வாய்ப்பளிக்கப்படாத பவலுக்கு இந்த ஐபிஎல்லாவது திருப்புமுனை ஆகுமா?

டாம் கோஹ்லர் கேட்மோர்

ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சவாலான விஷயமென்பது வெவ்வேறு களச் சூழல்களில் வெவ்வேறு தட்பவெப்ப நிலையில் ஆட வேண்டியதிருப்பதுதான். அதற்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்பவர்களால் மட்டுமே அதில் தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த விஷயத்தில் டாம் கோஹ்லர் கேட்மோர் பலே கில்லாடி. டி20 ஃபார்மெட், டி10 வடிவம், 100 பந்துகள் ஃபார்மெட் என எல்லாவற்றுக்கும் தனது பேட்டுக்குப் பயிற்சி கொடுத்துவிட்டார். 27 வயதாகும் இங்கிலாந்தைச் சேர்ந்த டாம் கோஹ்லர், கடந்த டிசம்பரில் அபுதாபியில் நடந்து முடிந்த டி10 போட்டி ஒன்றில் பெங்கால் டைகருக்கு எதிரான போட்டியில் 39 பந்துகளில், 96 ரன்களை எட்டி, தன்னை ஏலத்தில் எடுக்க வேண்டிய அவசியத்தைக் கூறுவதுபோல் அறைகூவல் விடுத்தார். விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என அனைத்து அவதாரங்களிலும் ஜனிக்கக் கூடிய டாம் கோஹ்லர் அணிக்கான பக்கபலம்‌. லங்கா பிரிமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என அனைத்திலும் ஆடிவிட்ட டாம்மோருக்கு இந்த ஐபிஎல் புது வாசல்களைத் திறக்கலாம்.

பென் மெக்டெர்மாட்

பென் மெக்டெர்மாட்

முன்னாள் ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர், பயிற்சியாளர் கிரேக் மெக்டெர்மாட்டின் மகனான பென் மெக்டெர்மாட் பேட்ஸ்மேனாக பரிணமித்து வருகிறார். 17 சர்வதேசப் போட்டிகளில் ஏற்கெனவே ஆடிவிட்டாலும், இன்னமும் ஒரு ஐபிஎல் போட்டியில்கூட அவர் ஆடியதில்லை. டி20 லீக்குகளுக்காகவே அளவெடுத்து வடிவமைக்கப்பட்டது போல் செல்லும் இடங்களில் எல்லாம் பென் மெக்டெர்மாட் தடம் பதித்துதான் வருகிறார். அதில் கிட்டத்தட்ட 2500 ரன்களை எட்டி விட்ட பென், 133 ஸ்ட்ரைக் ரேட்டோடு பந்தை மிச்சம் பிடித்து ரன்களுக்கான உத்தரவாதத்தை அணிகளுக்குக் கொடுக்கக் கூடியவர். கடந்த பிக் பேஷ் லீக், அவரது கனவுத் தொடர். ஒரே பிக் பேஷ் லீக்கில் அதிக ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் 154 ஸ்ட்ரைக் ரேட்டோடு அடித்த 577 ரன்களோடு முதலிடத்தில் முடித்த பென் மெக்டெர்மாட், ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணியின் அற்புத நாயகனாக மாறினார். அவரது ஐபிஎல் ஆசை இந்த ஆண்டு நிறைவேற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

மிகேல் பிரிடோரியஸ்

தென் ஆப்ரிக்காவில் இருந்து இம்முறை ஏலத்தில் 48 வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். அதில் முக்கியமான வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவர் மிகேல் பிரிடோரியஸ். வேகத்தோடு தனது உயரத்தினையும் ஆயுதமாக்கி, பந்தைச் சற்றே அதிகமாக பவுன்ஸ் ஆகச் செய்து பேட்ஸ்மேனைத் திணறடிக்கும் வித்தைக்காரர்.

ஃபர்ஸ்ட் கிளாஸ் கரியர், லிஸ்ட் ஏ போட்டிகள், டி20 என எல்லா ஃபார்மெட்டுக்கும் சேர்த்து, 200 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார் மிகேல். இவரின் பெயர் 2020 இலங்கைத் தொடர், 2021 பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் என பல தொடர்களிலும், தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்றிருந்தது. எனினும், துரதிர்ஷ்டவசமாக ஏதோ ஒரு காரணத்திற்காக சர்வதேச கிரிக்கெட் களத்தைக் காணவும், அதேபோல் ஐபிஎல்லோடு அளவலாவவும், மிகேல்லுக்கு இதுவரை சந்தர்ப்பம் அமையவே இல்லை. இந்த முறை, அது நேரலாம்.

ட்வைன் பிரிட்டோரியஸ்

தென் ஆப்ரிக்க மண்ணைச் சேர்ந்த இன்னொரு வேகப் பந்து வீச்சாளர் ட்வைன் பிரிட்டோரியஸ். முழுநேர பௌலர் மட்டுமே எனக் கட்டம் கட்டி விட முடியாத அளவு, அதற்குச் சமமாக தனது பேட்டிங் ஸ்டேட்ஸையும் நிரப்பிக் கொண்டவர். இந்தியா கோலி தலைமையில் வென்ற அண்டர் 19 உலகக் கோப்பையில், 2008-ல் அதிரடியாக அறிமுகமாகியிருக்க வேண்டியவர். தேர்வுக் குழுவை, தனது திறனால் கவர்ந்திருந்தாலும், முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் விளையாட முடியாமல் ஒதுங்கி நிற்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர். வருண் சக்ரவர்த்தியைப் போலவே வருடக் கணக்கில் கிரிக்கெட்டை விட்டு விலகி தனது கரியரில் கவனம் செலுத்தி விட்டு, பின் ஒரு கட்டத்தில் கிரிக்கெட் இல்லாத வெறுமை வலியூட்ட, மறுபடியும் 2011-ல் கம்பேக் கொடுத்தவர். ஆனாலும், காலில் ஏற்பட்ட வலி அவருக்கு தொடர்ந்து இடையூறு செய்தது.

ட்வைன் பிரிட்டோரியஸ்

மனதார விரும்புவதைவிட்டு ஒட்டுமொத்தமாக விலக நேரும் போது அதனுடன் தொடர்ந்தால்கூட, தொடர்பில் இருந்தால்கூடப் போதும் என நம்மை நாமே மாற்றிக் கொள்வோமே… அப்படித்தான் ட்வைனும் செய்தார். வருண் வேகப்பந்து வீச்சை விட்டு, ஸ்பின்னர் அவதாரம் எடுத்தது போல் ட்வைன் ஆல்ரவுண்டர் ஆசைக்கு முழுக்குப் போட்டு பௌலிங்கிற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தார். 140-க்கு அதிகமான வேகத்தில் மார்க் உட் போல மிரட்டிக் கொண்டிருந்தவர், அதனைக் குறைத்து நெடுநாள் விளையாட வழிவகை செய்தார். இது தேசிய அணி வரை அவரை எடுத்துச் சென்றது. உள்ளூர்ப் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து, விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பினும், சர்வதேசப் போட்டியில் அவரது கவனம் பௌலிங்கில் மட்டுமே இருந்தது. டெஸ்டில் சாதிக்க முடியாவிட்டாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலா 20 போட்டிகளுக்கும் மேல் அவரை ஆட வைத்துவிட்டது. ஆனாலும், ஐபிஎல் வாய்ப்பு 32 வயதாகியும் அவருக்கு அமையவில்லை. அவரும் விடுவதாக இல்லை. இம்முறையும், ட்வைன் 50 லட்சத்தினை அடிப்படை விலையாக நிர்ணயித்து காத்திருக்கிறார்.

டேரில் மிட்செல்

ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் த கிரிக்கெட்டை சமீபத்தில் வாங்கி இருக்கும் நியூசிலாந்து ஆல்ரவுண்டர். சர்வதேசப் போட்டிகளில் சொற்ப எண்ணிக்கையிலேயே ஆடியிருந்தாலும், ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் ஆடாத போதிலும் எல்லோரும் அறிந்து வைத்திருக்கக் கூடிய வீரர். வேகத்தால் வலைவிரிக்கக் கூடிய மத்திய வரிசையில் பேட்டிங் பலம் காட்டக்கூடிய வீரரான டேரிலும் ஐபிஎல்லில் தனது முதல் வாய்ப்புக்காக 75 லட்சம் அடிப்படைத் தொகையோடு இம்முறை காத்திருக்கிறார்.

Dewald Brevis | டெவால்ட் பிரெவிஸ்

டெவால்ட் பிரெவிஸ்

உலகக் கிரிக்கெட்டின் சமீபத்திய சென்ஷேசன் டெவால்ட் பிரெவிஸ். பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா வெல்லவில்லை, இறுதிப் போட்டிக்குக் கூட முன்னேறவில்லை. ஆனால், அந்த அணியின் டெவால்ட், ஏபிடி வில்லியர்ஸின் அதே ஜெர்ஸி எண் 17-வுடன் அதே போன்ற அன்ஆர்தடாக்ஸ் ஷாட்களோடு அனைவரையும் ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்திவிட்டார். அந்த உலகக் கோப்பையில் அதிக ரன்களைக் குவித்த வீரரும் அவர்தான். ஆறே போட்டிகளில் 84.3 சராசரியோடு 506 ரன்களைக் குவித்துள்ளார். இவரைத் தவிர வேறு யாரும் 400 ரன்களைக் கூடத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆறு போட்டிகளில் இரண்டு சதங்களும், மூன்று அரை சதங்களும் என்பதுதான் பிரம்மிக்கத்தக்கது. இது எல்லாம் சேர்ந்து இவருக்கான ஏலத்தொகையே எங்கேயோ கொண்டு போய் நிறுத்தும் என்பதை உணர்த்தியுள்ளது. ஏபிடி இல்லாமல் தவிக்கும் ஆர்சிபி தனது கையிருப்பில் கணிசமான தொகையை இவருக்காகச் செலவழிக்கும்.

ஷரித் அசலங்கா

பொதுவாக, ஐபிஎல் அணிகள், துணைக் கண்டத்தைச் சார்ந்த வீரர்களை, ஓவர்சீஸ் வீரர்களாகத் தேர்ந்தெடுக்க பெரிதாக ஆர்வம் காட்டாது. மலிங்கா, ரஷித் போன்ற விதிவிலக்குகள் இருந்தாலும் அந்தளவு அகச்சிறந்த ஆட்டக்காரர்கள் மட்டுமே ஐபிஎல் அணிகளால் அங்கீகரிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் இலங்கையின் அசலங்கா அதிகமான கவனத்தைக் கவருவார். 130-க்கும் அதிகமான ஸ்டைர்க் ரேட் வைத்திருக்கும் இவர் இந்திய அணி உடனான தொடரிலும், டி20 உலககோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் பல ஐபிஎல் அணிகளின் பார்வையில் விழுந்துள்ளார்.

ஷரித் அசலங்கா

இது வெறும் உதாரணத்திற்காகத்தான். உண்மையில் இந்தப் பிரிவில், இன்னமும் பல பெயர்கள் உள்ளன. பிரவீண் தம்பேக்கு, தனது கிரிக்கெட் வாழ்வின் முடிவில் அறிமுகம் தந்ததுதானே இந்த ஐபிஎல். இதில் ஏதோ ஒரு வீரருக்குக்கூட இம்முறை அது நேரலாம். மொத்த கேமராவின் கண்களும் அவரை உற்று நோக்கக் காத்திருக்கலாம்.

அப்படி நீங்கள் நினைக்கும் வீரர் யார் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.