இரண்டே நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும்: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: அடுத்த இரண்டு நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என வெள்ளை மாளிகை கணித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லையில் சுமார் 1 லட்சம் வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் இறங்கியுள்ளன. ஆனால், எந்த சமாதானத்தையும் ஏற்காத ரஷ்யா இன்னும் இரண்டே நாட்களில் உக்ரைன் மீது போர் தொடுக்கும் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் கணித்துள்ளன. ஆகையால், அமெரிக்கர்கள் உடனடியாக உக்ரைனிலிருந்து வெளியேறும்படி எச்சரித்துள்ளன. முன்னதாக நேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது நாட்டு மக்கள் உக்ரைனில் இருந்து உடனே வெளியேறும்படி அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய படையெடுப்பு குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக சல்லிவன் கூறுகையில், விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான படையெடுப்புக்கு உத்தரவிட்ட அதிகாரபூர்வ தகவல் எங்களிடம் இல்லை. ஆனால், எல்லையில் உள்ள பதற்றம் விரைவில் போர் ஏற்படுவதற்கான சாத்தியங்களைத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. இதனால், ஆபத்து பல மடங்கு அதிகமாகியுள்ளது. அங்குள்ள அமெரிக்கர்கள் நிலைமையை உணர்ந்து வெளியேற வேண்டிய சரியான தருணம் இது என்று கூறியுள்ளார்.

ஜேக் சல்லிவன்

இந்நிலையில், அடுத்தவாரம் பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் மாஸ்கோ செல்கிறார். உக்ரைன், ரஷ்யா இடையே அமைதியை நிலைநாட்ட இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.

உக்ரைன் பதற்றத்தால் ஜப்பான் அரசும் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளது.

நேட்டோவில் இணைய எதிர்ப்பு: இத்தனை பதற்றத்திற்கும் காரணம் உக்ரைன் நேட்டோ படையில் இணைய மேற்கொள்ளும் முயற்சி மட்டும்தான்.

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.

இந்த நிலையில் ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷ்யா கூறுகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாக குற்றம்சாட்டுகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவை மட்டுப்படுத்துவதற்காகவே உக்ரைன் பிரச்சினையை அமெரிக்கா ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்றே புதின் தொடர்ந்து முழங்கி வருகிறார். எந்த நேரம் போர் மூண்டுவிடலாம் என்ற சூழலில் உள்ள ரஷ்யா, உக்ரைன் விவகாரம் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்பட்டு வரும் நிகழ்வாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.