`சேர்லாம் இருக்கு; ஆனா, உக்கார்ந்தா எங்க வேலை இருக்காது!' – நாற்காலி சட்டமும் நடைமுறையும்

அனைத்துப் பணியிடங்களிலும் ஊழியர்கள் உட்காருவதற்கு கட்டாயம் நாற்காலி போட வேண்டும் என்ற சட்டத் திருத்த மசோதா 2021 செப்டம்பர் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, செப்டம்பர் 13-ம் தேதி சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் அமலில் உள்ளதா, உண்மையிலேயே ஊழியர்களுக்குப் பணியிடங்களில் நாற்காலி போடப்பட்டுள்ளதா என்பதை அறிய களத்தில் இறங்கினோம்.

Representational Image

பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்யும் ஆண் ஊழியர் ஒருவர் பேசுகையில், “8 மணில இருந்து 10 மணி நேரம்கூட தொடர்ந்து நிக்கிறோம். நாற்காலியெல்லாம் போட்டிருக்காங்க. ஆனா, எங்களுக்கு உட்கார நேரமும் அனுமதியும்தான் இருக்காது. தொடர்ந்து வேலை செஞ்சுகிட்டேதான் இருக்கணும். ஓய்வுன்னா எங்களுக்கு என்னனுகூடத் தெரியாது. சட்டம் வந்தாலும் எங்க நிலைமை மாறல” என்றார்.

நுங்கம்பாக்கத்தில் பிரபலங்கள் பலரும் வந்து உணவருந்தும் காபி ஷாப் அது. அங்கு மேசையை சுத்தம் செய்யும் பெண் ஊழியரிடம் பேசினோம். “மதியம் 12 மணிக்கு வேலைக்கு வருவேன்; நைட் ஒரு மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன். 12 மணி நேரம் நின்னுகிட்டே இருக்கணும். கால் பயங்கரமா வலிக்கும், கழுத்து வலி வேற உயிர் போகும். சாப்பாடெல்லாம் கொடுப்பாங்க. ஆனா, சாப்பிடத்தான் நேரம் இருக்காது. சாப்பிடவே நேரமில்லாதப்ப உட்கார எங்கேருந்து நேரம் இருக்கும்” என்று வருத்தப்பட்டார்.

Representational Image

அங்கு வேலை பார்க்கும் மற்றொரு பெண் பேசுகையில், “டைட்டா ஜீன்ஸ் போட்டுக்கிட்டு நடந்துகிட்டே இருக்கணும். மாதவிடாய் காலத்துலகூட ஓய்வெடுக்காம தொடர்ந்து நடக்குறது ரொம்ப சிரமமா இருக்கும். கால் வலிக்கும், வயிறு வலிக்கும்… ஆனா, முகத்தில காட்ட முடியாது. அந்த நேரத்துலயும் கஸ்டமரை புன்சிரிப்போடு கவனிக்கணும். ரொம்ப கால் வலிச்சா பத்து நிமிஷம் பாத்ரூம்ல போய் யாருக்கும் தெரியாம உட்கார்ந்துட்டு வருவேன். அதுவும் எங்கே போறோம்னு சொல்லிட்டுப் போகணும். இல்லைன்னா அதுக்கும் திட்டு விழும். இதுல எங்க சேர் போட்டு உட்காருறது” என்று விரக்தியாய் பேசினார்.

புரசைவாக்கத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக வேலைசெய்யும் சரவணன் கூறுகையில், “எனக்கு 50 வயசு ஆச்சு. நான் 5 வருஷமா இந்தக் கடையில வேலை செய்யுறேன். காலைல 9 மணிக்கு வந்தா. நைட் 9 மணிக்குதான் வீட்டுக்குப் போவேன். கால் வலி அதிகமா இருக்குறதால வீட்டுக்குப் போனதும் தூங்கிடுறோம். மனைவி, பிள்ளைகள் கூட பேசக்கூட முடியாது. இங்க 20 வருஷமா வேலை செய்றவங்களுக்கு கால்ல உள்ள நரம்பெல்லாம் வெளியில் தெரியும். ரத்த ஓட்டம் சீரா இருக்காது. கால்வலிக்கு பெல்ட் போட்டுப்பாங்க. இங்க வேலை செய்றவங்க எல்லாரும் வயசானவங்க.

துணிக்கடை

வேலை பார்க்கிற இடத்துல நாற்காலி போடணும்னு சட்டம் வந்த பிறகு, பேருக்கு நாற்காலி போட்டாங்க. ஆனா, உட்கார நேரமோ அனுமதியோதான் கிடைக்காது. வேலை நேரத்துல நாற்காலியில உட்கார்ந்தா சம்பளத்துல பிடிச்சிருவாங்க. வேலையைவிட்டு தூக்கிருவாங்கன்னு பயத்துல யாரும் உட்கார மாட்டாங்க” என்கிறார்.

சென்னை தி.நகரில் நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை பார்க்கும் அஞ்சலி பேசுகையில், “சேர்லாம் இருக்கும்மா… எங்களை உட்காரத்தான் விடமாட்டாங்க. நின்னுகிட்டே இருக்கணும். சில நேரங்கள்ல ஆளில்லைன்னா ஓவர் டைம் பாக்கணும். ஆனா, அதுக்குத் தனி சம்பளம் இல்லை. சாதாரண நாள்கள்லயே கால் வலி அதிகமா இருக்கும். வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குப் போய் அங்க வீட்டு வேலை பார்க்கணும். புள்ளைங்களைக் கொஞ்சக்கூட நேரம் இருக்காது. வலியில அப்படியே தூங்கிடுவோம். சாதாரண நாள்கள்லயே கால் வலி அதிகமா இருக்கும். மாதவிடாய் காலத்துல இன்னும் நிலைமை ரொம்ப மோசமா இருக்கும்” என்கிறார்

Store

கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உட்காரும் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சமீபத்தில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் சாராம்சம் என்ன? இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளதா? நடைமுறைப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சிஐடியு (CITU) மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திருவேட்டை.

“1947-ம் ஆண்டு Shop establishment act கொண்டு வரப்பட்டது. வணிக வளாகங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் வருவதால் தீயணைப்பு போன்ற பாதுகாப்பு அம்சத்துடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படைகளையே இந்தச் சட்டம் வலியுறுத்தியது.

1980-க்குப் பிறகு, வணிக வளாகங்கள் அதிகமாகப் பெருகின. வணிக வளாகங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து 8 – 10 மணி நேரம் வேலை செய்வதால் பல்வேறு உடல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். கழிவறைக்குச் செல்வதில்கூட அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதையடுத்து கேரளாவில் பெண்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை மேற்கொண்டனர்.

Representational Image

Also Read: How to: குறைந்த விலையில் வாடகைக்கு கிடைக்கும் நவீன வேளாண் கருவிகள்; விண்ணப்பிப்பது எப்படி?

பல போராட்டங்களைப் பெண்கள் முன்னெடுத்ததைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு கேரளாவில் பினராயி விஜயன் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், வேலை இடங்களில் கட்டாயம் நாற்காலி போட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. சட்டம் திருத்தி அமைக்கப்பட்டாலும் நடைமுறையில் இந்தச் சட்டம் அமலில் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. பல கடைகளில் பெயருக்கு நாற்காலி போடப்பட்டிருக்கிறது. ஆனால், ஊழியர்கள் உட்காருவதற்கு அனுமதியில்லை.

இதை முறைப்படுத்த தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கடைகளுக்குச் சென்று தொழிலாளர்களின் பிரச்னை குறித்து கேட்டறிய வேண்டும். இருக்கை வசதி, கழிவறை வசதி போன்றவை இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு ஆய்வாளர்கள், வணிக நிறுவனங்களுக்கு நேரில் செல்லக் கூடாது. வணிக நிறுவனங்களுக்கு நேரில் சென்றால் தொழில் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு கூறியது. இதனால் தொழிலாளிகளின் பிரச்னை வெளியில் தெரியாமலே போக வாய்ப்புள்ளது” என்றார்.

Also Read: பெண் தொழிலாளர் வருமானம் வெகுவாகக் குறைந்தது… இந்தியாவின் நிலைக்கு என்ன காரணம்?

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் கேட்டோம். “அனைத்துக் கடைகளிலும் நாற்காலி போட வேண்டும் என்ற சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து அனைத்துக் கடை உரிமையாளர்களிடமும், தொழிற்சங்கங்களிடமும் விரைந்து கலந்தாலோசிக்க உள்ளோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.