திருமண வரவேற்பில் மணப்பெண் மூளைச்சாவு.. உறுப்புதானம் செய்த பெற்றோர்!

கர்நாடகத்தில் ஒரு உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.
திருமணம்
முடிந்து , வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது புதுமணப் பெண் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் பரிசோதித்தபோது அவர் மூளைச் சாவடைந்தது தெரிய வந்தது. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள், தங்களது மகளினின் உடல் உறுப்புகளை தானம் செய்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ள கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் அந்தப் பெண்ணின் பெற்றோரை வெகுவாக பாராட்டியுள்ளார். மக்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக அவர்கள் திகழ்வதாகவும் கூறியுள்ளார்.

கோலார்
மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூரைச் சேர்ந்தவர் 26 வயதான சித்ரா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமக்கள் மகிழ்ச்சியுடன் அதில் கலந்து கொண்டனர். உற்றார் உறவினர் என நிகழ்ச்சியே விமரிசையாக இருந்தது. அப்போது திடீரென சித்ரா மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சித்ராவை பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சித்ரா, மூளைச் சாவடைந்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இருப்பினும் தங்களை திடப்படுத்திக் கொண்டு சித்ராவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து சித்ராவின் உடலிலிருந்து முக்கிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதுதொடர்பான செய்தி பரவவே கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் பெற்றோருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில், சித்ராவுக்கு அது மிகப் பெரிய நாள், மறக்க முடியாத நாள். ஆனால் விதி வேறு விதமான திட்டத்துடன் இருந்துள்ளது துரதிஷ்டவசமானது. நெஞ்சைப் பிசையும் இந்த துயரத்திலும், சித்ராவின் பெற்றோர், தங்களது மகளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர். இது பலரை வாழ வைக்கும். இது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார் சுதாகர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.