பாஜக வென்றால் பொது சிவில் சட்டம் அமலாகும் – உத்தராகண்ட் முதல்வர் தாமி சர்ச்சை

புதுடெல்லி: உத்தராகண்டில் பாஜக வென்றால், பொது சிவில் சட்டம் அமலாகும் என அம்மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி உறுதி அளித்துள்ளார். பாஜக ஆளும் இம்மாநிலத்தில் மீண்டும் அவர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்திலிருந்து பிரிந்த மாநிலம் உத்தராகண்ட். இம்மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ல் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜகவின் முதல்வராக புஷ்கர்சிங் தாமி வகிக்கிறார். தனது வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரம் செய்தவர் அதன் கடைசிநாளான இன்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் அவர், உத்தராகண்டில் பாஜக மீண்டும் வென்றால் அனைத்து மதங்களையும் இணைந்து பொது சிவில் சட்டம் கொண்டுவருவதாக உறுதி அளித்துள்ளார். இது உத்தராகண்டின் ஆன்மீகக் கலாச்சாரத்தை பாதுகாக்க அவசியமாக இருப்பதாகவும் முதல்வர் தாமி தெரிவித்துள்ளார்.

மேலும், “பொது சிவில் சட்டம் மூலம் தான் இந்த சமூகத்தில் நல்லிணக்கம் கொண்டு வர முடியும். இதன்மூலம், ஆண், பெண் சரிநிகர் உரிமைகளும் பேண முடியும். தற்போது திருமணம் மற்றும் அதற்கான விவாகரத்து மீதான சட்டங்கள், நம் நாட்டில் ஒவ்வொரு மதங்களுக்கும் தனித்தனியாக உள்ளன. இதுபோல் அல்லாமல், அனைத்து மதத்தவர்களுக்குமான சட்டங்கள் ஒரே வகையாக இருப்பது அவசியம். இதில், எந்தவிதமான ஜாதி, மத பேதங்கள் இருக்கக் கூடாது. இதற்காக ஒரு குழு அமைத்து ஆலோசனை செய்து பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். இதில் உறுப்பினர்களாக, சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் அமர்த்தப்படுவர்” என முதல்வர் தாமி தெரிவித்துள்ளார்.

பாஜக முதல்வர் தாமியின் இந்த அறிவிப்பை உத்தராகண்டின் மாநிலங்களவை எம்.பியான அனில் பலவுனி வரவேற்றுள்ளார். பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளரான பலவுனி, முதல்வர் தாமியின் அறிவிப்பிற்கு ஆதரவு பெருகும் எனவும் கருத்து கூறியுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கைகளில் பொது சிவில் சட்டம் அமலாக்குவது என்பது தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. இதற்கு சிறுபான்மையினர் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில், முதல்வர் தாமியின் அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.