மீரா ஜாஸ்மினை வரவேற்ற கீர்த்தி சுரேஷ்

2000-ன் துவக்கத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து ரன், சண்டக்கோழி என இரண்டே படங்களில் ரசிகர்களின் மனதை தன் அழகாலும் நடிப்பாலும் கட்டிப்போட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மின், ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார்.

அந்தவகையில் கடந்த ஐந்து வருடங்களாக பெரிய அளவில் படங்களில் தலைகாட்டாமல் இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் ஜோடியாக மகள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கணக்கு துவங்கி தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளதை வரவேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “மீரா ஜாஸ்மின் எப்போதும் போல பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறார். உங்களுடைய நடிப்பை மீண்டும் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் சேச்சி” என கூறி மீரா ஜாஸ்மின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதற்கு மீரா ஜாஸ்மினும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.