முடித்திருத்தம் செய்வதில் சாதிய பாகுபாடு – உண்மையை உடைத்த புதுக்கோட்டை பட்டியலின மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் முடி திருத்தம் செய்வதில் சாதிய பாகுபாடு நிலவுவதாகவும், காலம்காலமாக தங்களுக்கு கிராமத்தில் உள்ள சலூன்களில் முடி திருத்தம் செய்வதில்லை என்று பட்டியலின மக்கள் கோட்டாட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.
புதுப்பட்டி, புதுக்கோட்டை புதுப்பட்டி கிராமத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சலூன் கடைகளில் முடி திருத்தம் செய்வதில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உத்தரவுக்கு பின் புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் மக்களின் கருத்துகளை வெளியாகின. இந்த செய்தியை சுட்டிக்காட்டி, பட்டியலின பிரதிநிதிகள், சலூன் கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோரை வரவழைத்து, வெள்ளிக்கிழமை கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
image
அப்போது தங்கள் கிராமத்தில் சாதி பாகுபாடு இல்லை என கோட்டாட்சியரிடம் எழுத்துபூர்வமாக பட்டியலின பிரதிநிதிகள், சலூன் கடை உரிமையாளர்கள் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில்,கோட்டாட்சியர் அபிநயா, புதுக்கோட்டை ஆதி திராவிடர் நல அலுவலர் கருணாகரன், ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் உள்ளிட்டோர் புதுப்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களிடம் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது தங்கள் கிராமத்தில் பல காலமாக சாதிபாகுபாடு நிலவுவதாகவும், தங்களுக்கு முடி திருத்தம் செய்வதில்லை என்றும், மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பட்டியலினத்தவர்களுக்கு முடித்திருத்தம் செய்ய கோட்டாட்சியர் ஏற்பாடு செய்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பட்டியலின மக்கள், அதிகாரிகள் இருப்பதால் இன்று முடித்திருத்துபவர்கள், நாளை மறுப்பார்கள் என்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, விசாரணையை முடித்துக்கொண்ட கோட்டாட்சியர், விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்வார் எனத் தகவல் வெளியாகிஉள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் கவிதா ராமுவிடம் கேட்டபோது, புதுப்பட்டி கிராமத்தில், தானும் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். புகார் உண்மையாக இருப்பின் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றச்சாட்டு தொடர்பாக 4 வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் புதியதலைமுறையிடம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.